கனா படம் முதல் டி20 உலக கோப்பை இந்திய அணி வரை.. யார் இந்த சஜனா.?.. ஏழ்மையால் கடந்து வந்த கடினமான பாதை

0
374

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சஜனா சஜீவன் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரானஒரு போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மும்பை அணியை வெற்றி பெற வைத்தது அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

இந்த கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கையை சற்று திருப்பிப் பார்த்தால் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மிகப்பெரிய உத்வேகமாக அமையும்.

- Advertisement -

கேரளாவில் உள்ள வயநாட்டில் சஜீவன் மற்றும் சாரதா ஆகியோரின் மகள் தான் இந்த சஜனா சஜீவன். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது மிகப்பெரிய ரசிகையாக இருந்திருக்கிறார். ஆனால் இவரது கனவிற்கு உதவும் வகையில் இவரின் குடும்ப பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை.

சஜனா சஜீவனின் கிரிக்கெட் பயணம் குறித்து அவரது தந்தை சஜீவன் கூறும் போது “எங்களது குடும்பத்தின் வருமானம் கிரிக்கெட் குறித்த அவரது தேவைகளுக்கும் பயணங்களுக்கும் போதுமானதாக இல்லை. ஆனால் அவளுக்கு கிரிக்கெட் மீது மட்டும் எப்போதும் தீராத காதல் இருந்தது. ஆனால் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சேர்ந்து எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளிகளில் தேங்காய் இலைகளுடன் கிரிக்கெட் விளையாட்டை விளையாடுவது வழக்கம்.

- Advertisement -

ஒரு நாள் சஜனா சஜீவன் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரை இங்குள்ள கிருஷ்ணகிரி ஸ்டேடியத்தில் சந்தித்து அவர் ஆட்டோகிராப் போடப்பட்ட பேட் ஒன்றை வாங்கினார். அதைப் பார்த்ததும் கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்தை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அவரது கிரிக்கெட் ஆர்வத்தை உள்ளூர் அரசு பள்ளியின் ஆசிரியர் எல்சம்மா பேபி ஊக்குவிக்க சொன்னார்” என்று கூறி இருக்கிறார்.

தனது கிரிக்கெட் பயணம் குறித்து சஜனா சஜீவன் கூறும் போது “கிரிக்கெட் விளையாட பயணம் மேற்கொள்வதற்கு என்னிடம் போதுமான பண வசதி இல்லை. நான் எனது மாவட்டத்திற்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட போது தினசரி உதவித்தொகையாக 150 ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தேன். அது அப்போது எனக்கு பெரிய பணமாக இருந்தது. அந்தப் பணம் அப்படியே சிறிது சிறிதாக 300 மற்றும் 900 ஆக மாறியது அது எனது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:1000 நாள் கழித்து வாய்ப்பு.. இங்கிலாந்து அறிவித்த எதிர்பாராத பிளேயிங் XI.. 2வது இலங்கை டெஸ்ட்

மேலும் ஐபிஎல் ஏலத்தின் போது சஜனா மிகவும் பதட்டத்தோடு இருந்ததாகவும், ஏலத்தை டிவியில் கூட பார்க்கவில்லை என்றும் அதேசமயம் மும்பை அணிக்கு தேர்தெடுக்கப்பட்ட பிறகு மிகவும் மகிழ்ச்சியோடு இருந்ததாகவும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் போன் செய்து பேசியதாகவும் அவரது தந்தை கூறியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சஜனா ஜீவன் அவரது ஆரம்ப விலையான 5 லட்சத்திலிருந்து 15 லட்ச ரூபாய்க்கு மும்பையால் வாங்கப்பட்டார். மேலும் இவரது கடின உழைப்பின் உச்சமாக டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட இருக்கிறார் என்பதும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி ஆகும்.

- Advertisement -