தனிப்பட்ட காரணத்தினால் வெளியேறிய அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு மாற்று வீரரை தேர்வு செய்துள்ள கொல்கத்தா அணி

0
60
Alex Hales KKR

அலெக்ஸ் ஹேல்ஸ் இது வரை ஐபிஎல் தொடரில் மொத்தமாகவே 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2018 ஆம் ஆண்டு விளையாடிய அவர் மொத்தமாக 148 ரன்கள் குவித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. கடந்த மாதம் நடந்த மெகா ஏலத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தார்.

ஒரு கோடியே 50 லட்ச ரூபாயை தன்னுடைய அடிப்படை விலையாக நிர்ணயம் செய்து இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர் நிர்ணயம் செய்திருந்த அடிப்படை விலையான ஒரு கோடியே 50 லட்ச ரூபாய்க்கே அவரை கைப்பற்றியது. டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் அதிரடியாக விளையாட கூடிய வீரர் என்பதால், அவரது ஆட்டத்தை காண கொல்கத்தா அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ்

ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26ம் தேதி துவங்கி மே மாதம் 29ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கின்றது. இந்த குறிப்பிட்ட நாட்களில் வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் தங்கி ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ நிபந்தனை விடுத்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பயோ பபுள் நடைமுறையை மேற்கோள்காட்டி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

மாற்று வீரரை தேர்வு செய்துள்ள கொல்கத்தா அணி

தற்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அலெக்ஸ் ஹேல்ஸ்சுக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரோன் பின்ச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், டெல்லி, புனே, ஹைதராபாத், மும்பை, குஜராத், பஞ்சாப் மற்றும் பெங்களூரு என பல அணிகளில் இதற்கு முன் ஆரோன் பின்ச் விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

டி20 போட்டிகளில் பொருத்தவரையில் 347 போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் மற்றும் 68 அரை சதங்கள் உட்பட 10,444 ரன்கள் ஆரோன் பின்ச் குவித்திருக்கிறார். டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 33.90 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 139.86 ஆகும்.

கொல்கத்தா அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் வெளியேறினாலும் அவருக்கு மாற்று வீரராக ஆரோன் பின்ச் வந்துள்ளதால் கொல்கத்தா அணி ரசிகர்கள் தற்போது உற்சாகமாக இருக்கின்றனர். டி20 போட்டிகளில் கேப்டனாக பல போட்டிகளில் ஆரோன் பிஞ்ச் விளையாடியுள்ளதால் அவரது அனுபவம் கொல்கத்தா அணிக்கு கைகொடுக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.