இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆசியக் கோப்பையில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.
ஆசியக் கோப்பையில் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.
இந்த காரணத்தால் நேற்றைய தோல்வி இந்திய அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனாலும் கூட உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு இருக்கின்ற வீரர்களை வைத்து விளையாடிய காரணத்தினால், அவர்களுடைய பேட்டிங் அணுகுமுறை குறித்த கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியில் பேட்டிங் நீளம் ஒன்பதாவது இடம் வரை இருந்தது. அவ்வளவு நீளமாக இருந்தும் 265 ரன்கள் வெற்றிகரமாக இந்தியாவால் துரத்த முடியவில்லை என்பது கவலையான விஷயமே.
நேற்றைய போட்டியில் மேல் வரிசையில் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 121 ரன்கள் அடித்து, இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்து கொண்டே இருந்தார். இவர் மேல் வரிசையில் சரியாக விளையாடாமல் இருந்திருந்தால், இந்த ரண்களுக்கு வாய்ப்பு மிகக்குறைவு.
அதே சமயத்தில் பேட்டிங்கில் எட்டாவது இடத்தில் வந்த அக்சர் படேல் முக்கியமான கட்டத்தில் 34 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார். வெற்றிக்கு அணியை மிக அருகில் அழைத்து வந்த அவர், எதிர்பாராத விதமாக ஆட்டம் இழக்க இந்திய அணியின் வெற்றி பறிபோனது. ஆனாலும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது.
நேற்றைய போட்டியில் விளையாடும் பொழுது அவருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது. கையில் பந்து அடித்து இருந்தது. இப்படி போட்டியில் அவருக்கு காயங்கள் உண்டாகிக்கொண்டே இருந்தது.
இந்த காரணத்தினால் அவர் ஆசியக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இருந்து மட்டும் விலக்கி வைக்கப்படுகிறார். அவரது இடத்திற்கு தமிழக வீரர் வலது கை சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பதினாறு ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளும், 233 ரண்களும், ஒரு அரைசதமும் அடித்திருக்கிறார். இது உலகக்கோப்பைக்கு தொடருமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!