இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் அது பெரிய பிரச்சினையாக சிஎஸ்கே அணிக்கு மாறிவிடும் எனவும் ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வென்றது. இதைத்தொடர்ந்து ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்தது. எனவே இரண்டு போட்டிகளின் தோல்வியிலிருந்து வெளியில் வருவதற்கு சிஎஸ்கே அணி கடுமையாக முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.
ரசிகர்கள் சொல்வது சிஎஸ்கேவுக்கு தெரியாதா?
இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சரியான முறையில் சிஎஸ்கே அணி உருவாக்கப்படவில்லை என வெளியில் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. இதன் காரணமாக பிளேயிங் லெவனில் சில வீரர்கள் நீக்கப்பட்டு வேறு சில வீரர்கள் சேர்க்கப்பட வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் வெளியில் இருந்து சில நாட்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “சிஎஸ்கே அணி கான்வேவை விளையாட வேண்டும். அது போதும் என ரசிகர்கள் சொல்லுகிறார்கள். ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடா ஆகியோரை முயற்சி செய்தீர்கள். பிறகு சாம் கரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரையும் முயற்சி செய்தீர்கள். நீங்கள் அனைவரையும் முயற்சி செய்து கடைசியில் இரண்டு போட்டிகளை தோற்று விட்டீர்கள். எனவே மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தால் அதிலிருந்து வெளியே வருவது கடினம்”
ஆடுகளத்தை குறை சொல்லாதீர்கள்
“கான்வே, ரச்சின் ரவீந்தரா மற்றும் ருத்ராஜ் மூவரும் அணியில் இருக்க வேண்டும். இவர்களில் யார் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தாலும் இவர்களே முதல் மூன்று இடங்களில் இருக்க வேண்டும். அப்படி இந்த மூவரும் முதல் மூன்று இடங்களில் இல்லை என்றால் அது சிஎஸ்கே அணிக்கு அழிவாகவே அமையும். நீங்கள் தொடர்ந்து வெளிநாட்டு ஆல் ரவுண்டர் தேவை என்று சொன்னால் உங்களால் முன்னேற முடியாது. இங்கிருந்து சரியான மாற்றத்தை செய்யுங்கள்”
இதையும் படிங்க : ஹர்திக் பேட்டிங்கில ரொம்ப பெரிய ஆள் போல.. திலக்கை வெளியே அனுப்பியது ஏன்? – ஹர்பஜன்சிங் பேச்சு
“நீங்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் ஆடுகளத்தை குறை சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பினால் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மெதுவான ஆடுகளத்தை அமைத்துக் கொள்ள உங்களால் முடியும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் டெல்லி அணியில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இருக்கிறார்கள். நீங்கள் அப்படி செய்தால் அதுவே உங்களுக்கு பிரச்சனையாகவும் மாறும்” எனக் கூறியிருக்கிறார்.






