நேற்று சென்னைக்கு பக்கத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனியிடம் சமன் செய்தார்.
இதன் காரணமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியா அல்லது ரிஷப் பண்ட்டா என்கின்ற விவாதங்கள் வெளியில் பெரிய அளவில் செல்ல ஆரம்பித்திருக்கின்றன. தற்போது இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா பதில் அளித்திருக்கிறார்.
34 டெஸ்டில் வந்த சாதனை
மகேந்திர சிங் தோனி மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறு டெஸ்ட் சதங்கள் நடித்திருக்கிறார். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் வெறும் 34 டெஸ்ட் போட்டிகளில் 58 இன்னிங்ஸ்களில் ஆறு டெஸ்ட் சதங்களை அடித்து விட்டார். இத்தோடு 90 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு முறை அதிரடியாக விளையாடச் சென்று ஆட்டம் இழந்தும் இருக்கிறார்.
மேலும் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர்கள் வரலாற்றில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் சதம் அடித்தஒரே ஒருவராக இருக்கிறார். இப்படியான காரணங்களால் அவரே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட் கீப்பர்களின் மிகச்சிறந்தவர் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கிரேட்டஸ்ட் ஆக ரிஷப் பண்ட் முடிப்பார்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” எம்எஸ்.தோனியின் பெயர் இந்த பட்டியலில் இருக்கிறது. எனவே இது குறித்து நிச்சயம் கேள்விகள் வரவே செய்யும். இருப்பினும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளில் யார் சதமடித்து இருக்கிறார்கள்? என்று பார்க்கப்படும். ஏனென்றால் நாம் அப்படித்தான் பழக்கப்பட்டு இருக்கிறோம். இந்த வகையில் இதை செய்திருப்பது ரிஷப் பண்ட் ஒருவர் மட்டும்தான்”
இதையும் படிங்க : இந்திய அணியில் இவரை மட்டும் கடவுள் வித்தியாசமாக படைச்சிட்டார்.. வேற லெவல் அறிவாளி – ஆகாஷ் தீப் புகழ்ச்சி
“ரிஷப் பண்ட் இப்பொழுது வெறும் 58 இன்னிங்ஸ்களில் ஆறு டெஸ்ட் சதங்கள் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்துவிட்டார். தற்போது அவர் கிரேட்டஸ்ட் ஆக இல்லை என்றாலும் கூட, நிச்சயம் அவர் ஓய்வு பெறும் பொழுது கிரேட்டஸ்ட் ஆகவே ஓய்வு பெறுவார். அவர்தான் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.