இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளை சமையலறையில் வைத்து கேலியாக மீம் போட்டவர்களுக்கு, நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரை இறுதியில் சிறப்பான பதில் கொடுக்கப்பட்டு இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
நேற்று இந்திய அணி வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்தில் 89 ரன்கள் எடுக்க, ஜெமிமா ரோட்டரிக்யூஸ் இறுதிவரை களத்தில் நின்று 134 பந்தில் 127 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள்.
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சில நேரங்களில் நான் வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். சோசியல் மீடியா கீபோர்ட் வீரர்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய பெண்கள் வெறும் இரண்டு ரன் வித்தியாசத்தில் தோற்றபொழுது நான் இதயம் உடைந்தது என ட்வீட் செய்திருந்தேன். அதில் கமெண்ட் செய்திருந்த சிலர் இந்திய வீராங்கனைகளை சமையலறையில் இருப்பது போல மீம் போட்டார்கள். இவர்கள் சமையல் அறையில்தான் இருக்க வேண்டியவர்கள் என்று சொன்னார்கள்”
“நீங்கள் விமர்சனம் செய்யலாம், ஆனால் கேலி செய்யாதீர்கள். கேலி செய்வது சரியானது கிடையாது. நீங்கள் விமர்சனம் செய்வது எனக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் நீங்கள் யாரையாவது தகுதியற்றவர்கள் என்று சொன்னால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் சமூக வலைதளத்தில் பார்த்த இந்த விஷயங்களை நிச்சயம் இந்திய வீராங்கனைகளும் பார்த்திருப்பார்கள்”
“நேற்றைய போட்டியில் துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் இல்லை. அவர் இடத்தில் வந்த சபாலி வர்மா ரன் எடுக்கவில்லை. மேலும் மந்தனா லெக் சைடில் அப்படி அவுட் ஆவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்திய அணிக்கு மோசமான துவக்கமே கிடைத்தது”
இதையும் படிங்க : பைனலில் இந்தியா.. எல்லா நாளுமே அழுதுகிட்டே இருந்தேன்.. கடவுள் எனக்காக போராடினார் – ஜெமிமா பேட்டி
” இதற்குப் பிறகு நல்ல பார்ட்னர்ஷிப் வந்தது. ஹர்மன் சிறப்பாக விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து ஏற்கனவே ஜெமிமா நீக்கப்பட்டிருந்தார். அவர் உள்ளே சேர்க்கப்பட்டார் ஆனால் முதல் போட்டியில் டக் அவுட் ஆகி மீண்டும் வெளியே உட்கார வைக்கப்பட்டார். எல்லா நாளுமே இந்த தொடரில் அவர் அழுது கொண்டிருந்ததாக சொல்லியிருந்தார். இறுதியில் அவர் உடனே போராடி அற்புதமான ஒரு சதத்தை கொண்டு வந்து அணியை வெற்றி பெற வைத்து விட்டார்” என்று பாராட்டியிருக்கிறார்.