இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட விஷயம் நடக்காது என்று தான் நம்பியதாகவும் ஆனால் இறுதியில் அது நடந்து விட்டது எனவும் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.
நேற்று இந்திய அணியில் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் சிறந்த முறையில் செயல்பட்டார். அதே சமயத்தில் இன்னொரு இடது கை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் பேட்டிங்கில் சிறந்த முறையில் செயல்பட்டார். இருவருமே இரு வேறு துறைகளில் தங்களுடைய சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார்கள்.
ரோகித் கேப்டன்ஷியில் இது நடக்காது என்று நினைத்தேன்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” சர்வதேச கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக மாறி இருக்கிறார். இதை எட்டிய முதல் இந்திய சுழல் பந்துவீச்சாளர் இவராகவே இருக்கிறார். இதில் கபில் தேவ் பாஜி வருகிறார் ஆனால் அவர் வேகப்பந்துவீச்சாளர். மேலும் ஜடேஜா இந்த போட்டியில் மூன்று விக்கெட் கைப்பற்றினார். அவை மிகவும் முக்கியமானதாக இருந்தது”
“ஜடேஜா விளையாடுவாரா இல்லையா? என்கின்ற கேள்வி இருந்தது. ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவருடைய பெயர் கடைசியாக இருந்தது. எனவே அவர் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் என்று நான் நினைத்தேன். ரோகித் கேப்டன்ஷியில் இரண்டு இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் தற்பொழுது இது நடந்திருக்கிறது. சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது”
இரண்டு வீரர்களின் மாறிய ரோல்
“ஆடுகளத்தில் இருந்து சிறிது உதவி கிடைத்தாலும் கூட அதை ஜடேஜா மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். உண்மையில் பந்துவீச்சில் மேன் டு மேன் மார்க்கிங் செய்தால் இதில் ஜடேஜா அக்சர் படேலை விட சிறப்பாக இருந்தார். இதன் காரணமாக உங்களுக்கு ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவும், அக்சர் படேல் உங்களுடைய பேட்டிங் ஆல்ரவுண்டராகவும் மாறுகிறார்கள்”
இதையும் படிங்க: சேவாக் சொன்ன பேச்சை கேட்க மாட்டார்.. இதுக்காகவே நான் ஒரு ஸ்பெஷல் பிளான் வச்சிருந்தேன் – சச்சின் சுவாரசிய தகவல்
“ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஆதில் ரஷீத் இருவரும் பந்துவீச்சில் இருந்த காரணத்தினால் அக்சர் படேல் ஐந்தாவது வீரராக பேட்டிங் வரிசையில் உயர்த்தப்பட்டார். அவர் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார். ஜடேஜா பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை செய்தார். இரண்டு இடது கை சுழல் பந்துவீச்சாளர்களுமே உங்களுக்கு நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.