இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சிவம் துபே தாமாகவே தன்னை உருவாக்கிக் கொண்ட வீரர் என்றும், தமக்கு பலவீனமாக இருந்த பேட்டிங் விஷயத்தில் எப்படி அவர் பலமாக மாறி இருக்கிறார் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
நேற்று இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 69 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பொழுது, உள்ளே வந்த சிவம் துபே அதிரடியாக 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இந்திய அணி 193 ரன்களுக்கு செல்வதற்கு உறுதுணையாக இருந்தார். மேலும் பந்துவீச்சில் இரண்டு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வாங்கினார்.
முக்கிய மாற்றம் இதுதான்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 69 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. அப்பொழுது இந்திய அணியை யார் காப்பாற்றுவார்கள் என்ற நிலையில் சக்திமான் சிவம் துபே வந்தார். அவருக்கு உண்மையில் பெரிய சக்தி இருக்கிறது. அவர் அதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழந்து இருந்தாலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான அவரது ஆட்டம் மிக முக்கியமானது”
” அவரிடம் இருக்கும் சிக்ஸர் அடிக்கும் திறமை மிகவும் அபாரமானது. நீங்கள் நின்ற இடத்தில் இருந்து பின்னுக்கு நகராமல் சிக்ஸர் அடிக்க முடியும் என்றால், அடுத்து பவுலர் உங்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி விடுவார். தற்பொழுது சிவம் துபே ஷார்ட் பந்துகளுக்கு எதிராகவும் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் அவருக்கு ஸ்டெம்பை நோக்கி பந்தை வீசினால் நீங்கள் வெளியில் போய் பந்தை பொறுக்கி கொண்டு தான் வர வேண்டும்”
தானாக உருவானவர்
“சிவம் துபேவுக்கு ஒரு கட்டத்தில் மோசமான காலகட்டம் இருந்தது. இடையில் ஒரு நான்கு வருடங்கள் அவர் காணாமல் போய்விட்டார். அவருடைய மாநில அணியான மும்பை அணியிலும் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. பின்னர் அவர் மீண்டும் விளையாட வந்தார். அவர் தானாக உருவான ஒரு வீரர்”
இதையும் படிங்க : அபிஷேக் வீக்னஸ ஐபிஎல்ல என் பவுலிங்ல பார்த்தேன்.. அதைத்தான் இப்ப மத்தவங்க செய்றாங்க – அஸ்வின் பேச்சு
“அதன் பிறகும் கூட அவருக்கு பவுன்சர் பந்து வீச்சை விளையாடுவது பெரிய சிக்கலாகத்தான் இருந்து வந்தது. இருந்தாலும் அவர் தொடர்ந்து பயிற்சி செய்து முன்னேற்றத்தை அடைந்து தனித்துவமாக மாறி இருக்கிறார். அவர் தன்னுடைய திறமையை எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டே வந்தார். ஏனென்றால் அந்த வீரரிடம் உண்மையான நெருப்பு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






