பாகிஸ்தான் கிரிக்கெட் தினம் தினம் மடிந்து கொண்டிருப்பதாகவும், இதைப் பார்ப்பதற்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் வேதனை தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட் வாஸ் ஆகியது. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று இருக்கிறது. மொத்தம் ஐந்து டி20 போட்டிகளை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தோல்வி மோசமானது ஏன்?
பாகிஸ்தான் அணி முதலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 தொடரில் ஒயிட் வாஸ் ஆகிய பொழுது, ஆஸ்திரேலியா அணியின் முக்கியமான வீரர்கள் இந்திய டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அந்த டி20 தொடரில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியா இரண்டாம் கட்ட அணிதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது.
தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக முக்கியமான டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் தென் ஆப்பிரிக்க முக்கிய வீரர்களும் இந்த டி20 தொடரில் விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்க இரண்டாம் கட்ட அணிதான் விளையாடுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி தனது முழு பலத்தில் களம் இறங்கி கூட இந்த இரண்டாம் கட்ட அணிகளிடம் வெற்றி பெற முடியவில்லை என்பது மோசமான விஷயமாக அமைந்திருக்கிறது.
மேலிருந்து கீழ் வரை தூங்குகிறார்கள்
இதுகுறித்து அகமத் சேஷாத் கூறும் பொழுது “உண்மையைச் சொல்வது என்றால் நேற்று நடைபெற்ற போட்டியை பார்க்க பார்வையாளனாக நன்றாக இருந்தது. தென் ஆப்பிரிக்க ஏ அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் விளையாடுவது போல நான் உணர்ந்தேன். இரண்டு அணிகளிலுமே சர்வதேச கிரிக்கெட்டுக்கு விளையாடுவதற்கு தகுதி உள்ள சில வீரர்கள் இருக்கிறார்கள். மற்றபடி சாதாரண அணி வீரர்கள் போலவே மற்றவர்களின் செயல்பாடு இருந்தது”
இதையும் படிங்க : சிராஜை பேச ஆஸிக்கு தகுதியில்ல.. அடுத்த வருஷம் உங்கள அங்க பாத்துக்குறேன் – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
“நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த தென் ஆப்பிரிக்க டி20 அணியில் முக்கியமான ஏழு வீரர்கள் இல்லை. ஆனால் நாங்கள் முழு பலத்தை கொண்ட அணியுடன் விளையாடினோம். சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா இரண்டாம் கட்ட அணிக்கு எதிராக நாங்கள் விளையாடி ஒயிட் வாஸ் ஆனோம். பாகிஸ்தான் கிரிக்கெட் நாளுக்கு நாள் அழிந்து கொண்டிருக்கிறது. மேலிருந்து கீழாக அனைவரும் தூங்குகிறார்கள். மிகவும் வெட்கமாக அவமானமாக இருக்கிறது” என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.