ஆப்கானிஸ்தான் அணிக்கு திடீர் பின்னடைவு.. நட்சத்திர வீரர் காயத்தால் விலகல்.. மாற்றுவீரர் அறிவிப்பு

0
195
Afghanistan

ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகள் முதல் சுற்று உடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆனால் தற்பொழுது அந்த அணியில் ஒரு முக்கிய வீரர் விரலில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சி பிரிவில் இடம் பெற்றது. இந்தப் பிரிவில் வலிமையான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் பெற்று இருந்தன. எனவே இரண்டு பெரிய அணிகளில் ஒரு அணியை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், நியூசிலாந்து அணியை எளிதாக வென்று ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

அந்த அணியின் பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டர் மூவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் பவுலிங் யூனிட்டில் வேகப்பந்து வீச்சாளர் பஸருல்லா பரூக்கி கலக்கி வருகிறார். அவர் இதுவரையில் மூன்று போட்டிகளில் மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடக்கம். இன்னொரு முனையில் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத் கான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் பவர் பிளே ஓவரில் வந்து பந்து வீசி சிக்கனமாக இருப்பதோடு விக்கெட்டுகளையும் கைப்பற்றும் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறார். பவர் பிளேவில் இவர் பந்து வீச முடியும் என்கின்ற காரணத்தினால், அணிக்கு மிக முக்கியமான சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இடத்திற்கு துவக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஜசாய் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ரிசர்வ் வீரராக தொடர்வதால் அப்படியே அணியில் இணைந்து கொள்வார்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முஜிப் ஒரே ஒரு போட்டியில் மட்டும் உகாண்டா அணிக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் மூன்று ஓவர்கள் பந்துவீசி அவர் 16 ரன்கள் விட்டுத் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : கண்ணால பார்த்தேன்.. பாகிஸ்தான் ஒட்டு மொத்த கிரிக்கெட்டுக்கும் ஒரு விஷயம் தெரியாது – சோயப் மாலிக் வருத்தம்

மேலும் முஜீப் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 46 போட்டிகளில் விளையாடி 18.10 என்ற சராசரியில், ஓவருக்கு 6.35 ரன்கள் மட்டுமே கொடுத்து, 59 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். சந்தேகம் இல்லாமல் இவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு டி20 கிரிக்கெட்டில் மிக முக்கியமான வீரர். தற்போது இவர் காயத்தால் வெளியேறிருப்பது அந்த அணிக்கு சூப்பர் 8 சுற்றில் பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.