துபாயில் நடைபெற்ற ஐஎல்டி 20 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய நிலையில் எதிரணி வீரர் முகமது அமீரின் செயலுக்கு கேப்பிட்டல்ஸ் அணி வீரர் குல்பதின் நைப் விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
துபாய் ஐஎல் டி20 கிரிக்கெட் லீக்
ஐபிஎல் தொடர் போன்று துபாயில் ஐஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்ற வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடின. இதில் சாம் கரன் தலைமையிலான டெசர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷாம் கரண் 33 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி துபாய் கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. இதில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் குல்பதின் நைப் ஐந்து ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீரின் பந்துவீச்சில் எல்பி டபிள்யு ஆனார்.
அவர் ஆட்டம் இழந்த போது முகமது அமீர் அவரை ஆக்ரோஷமான முறையில் வழி அனுப்பினார். இது ஆல் ரவுண்டரை சற்று கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இருப்பினும் சிறப்பாக விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணி ரோமன் போவலின் அதிரடியின் மூலமாக 191 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் குல்புதின் நைப் போட்டி முடிந்த பிறகு தனது கண்டனங்களை முகமது அமீருக்கு தெரிவித்திருக்கிறார்.
யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பதை நான் எப்போதும் சொல்வேன். கிரிக்கெட்டை பொருத்தவரை நீங்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். நீங்கள் மரியாதை காட்ட வில்லை என்றால் யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள். முகமது அமீர் இந்த செயலை செய்ததன் மூலமாக அவர் எவ்வளவு மரியாதை பெற்றார் என்பது அவருக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு மனிதனாக நீங்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.
இதையும் படிங்க:நீங்க செஞ்ச தப்பான வேலை.. டீமும் பாழாகி பாபர் அசாமின் நம்பிக்கையும் வீணா போச்சு – பாக் முன்னாள் வீரர் பேட்டி
எங்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. எங்களுக்கு நிறைய ஆதரவு தரும் எங்கள் ரசிகர்கள் நல்ல நேரத்திலும் சரி, கெட்ட நேரத்திலும் சரி எங்களோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் 100 சதவீத உழைப்பை கொடுக்க முயற்சிக்கிறோம். மேலும் இறுதியில் நல்ல கிரிக்கெட் விளையாடினால் நாங்கள் கட்டாயமாக வெற்றி பெறுவோம்” என்று கூறி இருக்கிறார்.






