இன்று டி20 உலகக் கோப்பையில் டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் முதல் அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டி, தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு சென்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் இந்த மைதானத்தின் ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் ஆடுகளம் குறித்து தெரியாததால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்றைய நாள் பெரிய சோகமாக அமைந்துவிட்டது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய மிகக் கடினமான ஆடுகளத்தில் 11.5 ஓவரில் வெறும் 56 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு அஸமத்துல்லாஹ் ஓமர்சாய் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற 10 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை.
தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ யான்சன் மற்றும் தப்ரைஸ் சம்ஸி இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் ரபாடா மற்றும் நோர்க்கியா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சொர்க்கம் போல் இருந்தது.
இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆடுகளத்தை ஏற்கனவே பார்த்ததால் புரிந்து விளையாடியது. தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் விக்கெட் சீக்கிரம் இழந்தாலும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை இது பாதிக்கவில்லை. ரீஸா ஹென்றிக்ஸ் 25 பந்தில் 29 ரன், கேப்டன் எய்டன் மார்க்ரம் 21 ரன் என இருவரும் ஆட்டம் இழக்காமல் எடுக்க, தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : நாங்க ஒரு டீமா இன்னும் கிளிக் ஆகல.. ஆனா இந்தியாவுக்கு எதிரா இது போதும் – இங்கிலாந்து கோச் பேச்சு
மேலும் இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் முதல் அணியாக முதல்முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.






