தற்போது வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த முறை இன்னொரு துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட குல்பதின் நைப் 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் குவித்தார்.
இவர்களுக்கு அடுத்து ஆல் ரவுண்டர் அசமத்துல்லா ஓமர்சாய் 36 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரஷீத் கான் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. ஸ்காட்லாந்து தரப்பில் பிராட்லி கரி சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணி ஆல் அவுட் ஆகக்கூடாது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது. அந்த அளவிற்கு ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. ஒன்பதாவது இடத்தில் வந்த பேட்ஸ்மேன் மார்க் வாட் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 70 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதற்கு அடுத்து அந்த அணி ஆல் அவுட் ஆகக்கூடாது என்பதற்காக விளையாடி, இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. முடிவில் ஆப்கானிஸ்தான் அணி எந்த சிரமமும் இல்லாமல் அசத்தலாக 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முஜீப் மற்றும் கரீம் ஜனத் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : ஹர்திக் பழைய மாதிரி வர.. கிரீஸில் டெக்னிக்கலா இத மட்டும் செஞ்சா போதும் – இர்பான் பதான் அறிவுரை
நடப்பு உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்று பிரையன் லாரா கணித்த பொழுது, வலிமையான சுழல் பந்துவீச்சை கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான அணி அரைஇறுதிக்கு தகுதிபெறும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே அந்த அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது