இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கிரிக்கெட்டில் தன்னுடைய அணியை மாற்றிக்கொள்ள இருப்பதாக ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி இருக்கும் மூன்று போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடவில்லை. இது அவர் மீது தனிப்பட்ட அழுத்தத்தை உருவாக்குகிறது. மேலும் கடந்த ஆண்டும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு சிறந்த ஐபிஎல் சீசன் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ்வால் வாழ்க்கையை மாற்றிய மாநிலம்
ஜெய்ஸ்வால் சிறுவனாக இருந்த பொழுதே மும்பைக்கு வந்து கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார். வறுமையில் இருந்த அவரை பயிற்சியாளர் ஒருவர் தத்தெடுத்து வளர்த்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருக்கும் சிறந்த கிரிக்கெட் திறமையின் காரணமாக அவருக்கு மும்பை மாநில அணியில் இடம் கிடைத்தது. தொடர்ந்து மும்பை மாநில அணிக்காக மூன்று வடிவங்களிலும் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து மும்பை மாநில அணிக்கு முதல் தர போட்டிகளில் 70-க்கும் மேற்பட்ட சராசரியில் ரன்கள் குவித்ததின் காரணமாக அவருக்கு மிக விரைவாக இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இடம் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து தன்னுடைய இடத்தை உறுதி செய்தார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை ஏறுமுகத்தில் அமைவதற்கு மும்பை மாநிலம் மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது.
அணி மாறும் ஜெய்ஸ்வால்
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மும்பை மாநில அணிக்காக விளையாடுவதில் இருந்து விலகி கோவா மாநில அணிக்காக விளையாட விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதற்காக மும்பை மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு என்ஓசி கேட்டு அவர் விண்ணப்பித்திருப்பதாகவும், அது சம்பந்தமான வேலைகள் சென்று கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங் என்கிட்ட அந்த விஷயத்தை சொல்லவே இல்ல.. ஸ்ரேயாஸ் வேற மாதிரி ரகம் – நெகேல் வதேரா பேட்டி
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தரப்பில் வெளியாகியிருக்கும் செய்தியில் “ஜெய்ஸ்வால் எங்களிடமிருந்து என்ஓசி கேட்டிருக்கிறார். மேலும் அவர் கோவாவுக்கு சென்று விளையாட முடிவெடுத்திருப்பது அவருடைய தனிப்பட்ட விஷயமாக இருக்கிறது வேறு எந்த காரணங்களும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஜெய்ஸ்வால் கோவாவில் செட்டில் ஆவார் என்றும் கூறப்படுகிறது.






