இந்தியாவின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 தொடரில் அங்குள்ள மைதானங்களின் நிலைமைகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவார் என்று
முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக், ஆஃப் மற்றும் லெக் பக்கங்களில் சிறப்பாக விளையாடுவதால், ஆஸ்திரேலியாவில் நன்கு பந்தை அடிக்க முடியும் என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
25 வயதான அபிஷேக் சமீபத்தில் அபாரமான ஃபார்மில் உள்ளார். 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக 7 இன்னிங்ஸ்களில் 314 ரன்கள் குவித்து, தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், அவர் முதல் முறையாக அங்கு சர்வதேச போட்டியில் விளையாடுவதாக இருக்கும்.
ஆஸி மண்ணில் ரன் குவிப்பார்:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “சூர்யகுமார் யாதவ் பற்றி பேசினால், அவர் ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். அவரது அணுகுமுறையும், உடல் மொழியும், அற்புதமான பேட்டிங் திறமையும், ஆட்டத்தைப் பற்றிய சிறந்த சிந்தனையும் எனக்குப் பிடிக்கும். அபிஷேக் ஷர்மா தற்போது தனது வாழ்க்கையின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.”
“சிலர் இவர் தற்போது டி20 வடிவத்தில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது. அங்குள்ள மைதானங்களின் பவுன்ஸ் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”
“அவர் ஆஃப்-சைடில் தனது கைகளை விடுவித்து, பந்தை பவுண்டரிக்கு அனுப்புவதிலும், பாயிண்ட் முதல் தர்டு மேன் வரை ஆறு ரன்கள் அடிப்பதிலும் வல்லவர். அதேபோல், லெக்-சைடிலும் சிறப்பாக ஆட முடியும். முழுமையான ஆட்டக்காரர், பார்க்க அற்புதமான பேட்ஸ்மேன்.”
“இது ஒரு முழு ஆற்றல் மிக்க அணி. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியவர்களும், இந்தத் தொடருக்கு முன்பு நல்ல கிரிக்கெட் ஆடியவர்களும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தியா ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் மூளையுடைய தேர்வுக் குழுவால் பயனடைகிறது என்று நான் நினைக்கிறேன். வேறு விதமாக இதை விளக்க முடியாது.”
பலவீனம் இல்லாத அணி:
“ஆனால், தலைமை நிலையில் தரமான கிரிக்கெட் முடிவுகள் எடுக்கப்படுவதாகத் தோன்றுகிறது. இந்த அணிகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது அது தெளிவாகிறது. மிகவும் நிலையான, பலவீனங்கள் இல்லாத அணி. இந்த வீரர்களின் திறமை நமக்குத் தெரியும். ஐபிஎல்லில் இதைப் பார்த்திருக்கிறோம்.”
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை இந்திய அணியில் இருந்தே தூக்குங்க.. இனி அவர் தேவை இல்லை – இந்திய முன்னாள் வீரர் காட்டம்
“இப்போது, ஐபிஎல்லில் சிறந்து விளங்கிய தனிநபர்கள் ஒரே அணியில் இணைந்துள்ளனர். ஆரம்பம் முதல் இறுதி வரை இது முழு ஆற்றல் மிக்க அணி.” என்று டிவல்லியர்ஸ் கூறியுள்ளார்.24 டி20 சர்வதேச போட்டிகளில், அபிஷேக் 849 ரன்கள் 196.02 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும். தற்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.






