இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவரும் மீண்டும் சிறப்பாக விளையாடி மற்ற தொடர்கள் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரை வென்று தருவார்கள் என அபிஷேக் ஷர்மா கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணியில் இவர்கள் இருவரும் சரியான முறையில் பேட்டிக் செய்யாத காரணத்தினால் நிறைய குழப்பங்கள் இருந்து வருகிறது. இருவருமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், இவர்கள் சரியாக விளையாடாத பொழுது எடுத்ததுமே ஒட்டுமொத்த அணிக்கும் அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது.
கில் தேவைதானா?
தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஏற்கனவே இந்த வடிவத்தில் நிரூபிக்கப்பட்ட பேட்ஸ்மேனாக இருக்கிறார். தற்காலத்தில் சிறந்த டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவருக்கு முக்கியமான இடம் இருக்கிறது. மேலும் தனிப்பட்ட முறையில் அவர் போட்டியை வென்று கொடுத்த நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அவரால் சிறந்த தாக்கத்தை கொடுக்க முடியும்.
அதே சமயத்தில் கில் இதுவரையில் டி20 வடிவத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்தது கிடையாது. இந்த நிலையில் அவர் 15 க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை பெற்றும் இன்னும் ரன் அடிக்காமல் இருந்து வருகிறார். இப்படியான நிலையில்தான் அவருடைய நண்பர் அபிஷேக் ஷர்மா இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
நான் சொல்வதை நம்புங்கள்
இதுகுறித்து அபிஷேக் ஷர்மா பேசும் பொழுது ” நான் இப்பொழுது உங்களுக்கு ஒரு விஷயத்தை நேரடியாக சொல்கிறேன். நீங்கள் நான் சொல்வதை அப்படியே நம்புங்கள். சூரியகுமார் மற்றும் கில் இருவரும் டி20 உலகக்கோப்பைகளும் அதற்கு முன்பாக இருக்கும் மற்ற தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள்”
இதையும் படிங்க : 70.50.. விராட் கோலியின் பாகிஸ்தான் சாதனையை தாண்டி.. திலக் வர்மா மெகா ரெக்கார்டு.. அசத்தல் சம்பவம்
“நான் நீண்ட காலமாக கில் உடன் விளையாடி வருகிறேன். அவரால் எந்த இடத்திலும் எந்த அணியை எதிர்த்தும் விளையாடி வெற்றி பெற முடியும். ஆரம்பத்தில் இருந்து அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எல்லோரும் மிக விரைவில் அதை பார்ப்பார்கள். எல்லோரும் அவர் மீது நம்பிக்கை கொள்வார்கள் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






