வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக, இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட் வீழ்ச்சி குறித்தும், அவர் மீண்டும் பலமாக கம்பேக் கொடுப்பார் என்பது குறித்தும் முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசி இருக்கிறார்.
முதல் ஒருநாள் போட்டியில் 35 பால்களில் 32 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பௌலர் அல்ஸாரி ஜோசப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவசரப்பட்டு ஷாட் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.
பொதுவாக ஃபாஸ்ட் பௌலர்களின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொள்ளும் ரோஹித் சர்மா, இந்த போட்டியில் அல்ஸாரி ஜோசப்பின் மெய்டன் ஓவர் மற்றும் வேகத்தின் காரணமாகவே தனது விக்கெட்டை இழந்தார்.
இதுகுறித்து அபிஷேக் நாயர் பேசும்போது “நாம் ரோஹித் சர்மாவைப் பற்றி பேசும்போது, ஒரு ஃபாஸ்ட் பௌலர் பந்துவீசினால் அவர் எளிதாக ரன்கள் அடிப்பார் என்றே நினைப்போம். அது அவருக்கு ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் அல்ஸாரி ஜோசப் ஃபர்ஸ்ட் சேஞ்ச் பௌலராக வந்து தனது வேகத்தால் அவரை வீழ்த்திவிட்டார். இதைப்பற்றி ரோஹித் நிச்சயமாக யோசிப்பார். எனக்குத் தெரிந்து அவர் அறைக்குச் சென்று போட்ட வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து, எப்படி அவுட் ஆனோம், அந்த மெய்டன் ஓவர் எப்படி நடந்தது என்பதை அனலைஸ் செய்வார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் மிகவும் ஸ்ட்ராங்காக கம்பேக் கொடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த ஆட்டமிழப்பு அவரது மைண்டில் இருக்கும். அதனால் அடுத்த போட்டியில் அவர் ஆரம்பத்தில் டைம் எடுத்து விளையாடலாம் அல்லது தொடக்கத்திலிருந்தே கவுண்டர் அட்டாக் செய்யக்கூடும். அது அவர் அமைக்கும் பிளானைப் பொறுத்தது. இருப்பினும் குவாஹாட்டி பிட்ச் சிவப்பு மண் பிட்ச் என்பதால் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். அது ரோஹித்திற்கு ஒரு டெஸ்ட்டாக இருக்கும், இரண்டாவது போட்டியில் அவர் தனது அணுகுமுறையை சரிசெய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.