இந்திய அணி செஞ்சது வருத்தமா இருக்கு.. கிரிக்கெட்டில் இது இருக்கவே கூடாது – ஏபி டிவில்லியர்ஸ் விமர்சனம்

0
134

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஆனால் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்த விவகாரம் குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

எட்டு நாடுகள் பங்கு பெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை துபாயில் விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் மொசின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததால் அது சில சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது விளையாட்டில் எப்போதும் அரசியல் இருக்கக் கூடாது எனவும், விளையாட்டை எப்போதுமே விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று இந்திய அணியை விமர்சனம் செய்யும் வகையில் தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “யார் கோப்பையை வழங்குகிறார்கள் என்பதில் இந்திய அணி மகிழ்ச்சியடையவில்லை. அது விளையாட்டுக்கு சொந்தமானது என்று நான் நினைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் விளையாட்டில் அரசியல் ஒதுங்கி இருக்க வேண்டும். விளையாட்டை எப்போதுமே விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டு என்பது ஒரு விஷயம், அது எப்படி இருக்கிறதோ அதற்காகவே கொண்டாடப்பட வேண்டும். எனவே இப்போது இதைப் பார்ப்பது வருத்தமாக உள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்கள் சரிசெய்யப்படும் என்று கருதுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:IND vs WI: ஒரே நாளில் 3 பேர் சதம்.. துருவ் ஜூரல் அபாரம்.. விவிஎஸ் லட்சுமண் சாதனை சமன்

இந்த சூழ்நிலையில் இந்திய ரசிகர்கள் டிவில்லியர்ஸ் தெரிவித்த கருத்துக்கு தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்தியாவில் ஐபிஎல் தொடர் விளையாடி பணம் சம்பாதித்துவிட்டு இந்திய அணியை எப்படி விமர்சனம் செய்கிறீர்கள், என்று இந்திய ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -