இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட் திடீரென நேற்று அவர் தனது பதவியை விட்டு வெளியேறுகிறார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தென்ஆப்பிரிக்க வீரருமான ஏபி டிவிலியர்ஸ் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். மேலும் அவரது வலியுறுத்தலின் பேரில் கடந்த ஐபிஎல் மெகா ஏலமும் நடைபெற்றது. ஆனால் பெரிய வீரர்களை அணி நிர்வாகம் தக்க வைக்கத் தவறியதால் இந்த ஐபிஎல் சீசனில் பெருமளவு போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது.
மேலும் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பல போட்டிகளில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக, ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு வெளியேறுகிறார் என்று நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரரான டிவிலியர்ஸ் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்த அறிவிப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் அல்லது நிர்வாக அமைப்பின் முடிவாக இருக்கும் என்று தோன்றுகிறது. நிர்வாகம் அவருக்கு ஒரு பெரிய பரந்த பொறுப்பை நிர்வகிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. ஒருவேளை டிராவிட் இதற்காக வருத்தப்பட்டு இருக்கலாம் அல்லது ஆடுகளத்தில் தன்னை இன்னும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் ட்ராவிட் அவரது இடத்தை நிரப்ப முடியாத வகையில் பெரிய இடைவெளியை விட்டு செல்கிறார் என்பது உண்மை.
இதையும் படிங்க:இந்த 3 பேர் தான், என்னை போல் பயமின்றி விளையாடுறாங்க.. நல்ல எதிர்காலம் இருக்கு.. ரெய்னா கருத்து
டிராவிட் விளையாட்டை பற்றி நன்றாக அறிந்தவர். இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் நான் நிறைய இளைஞர்களிடம் பேசி இருக்கிறேன். அவர்கள் கூறுவது என்னவென்றால் டிராவிட் அவர்களது வாழ்க்கையில் பெரும் செல்வாக்கு செலுத்துவதாக பேசி இருக்கிறார்கள். லீக் போட்டிகளில் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக அமைப்பினர் கோப்பைகளை வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாத உடன் உரிமையாளர்களிடமிருந்து கேள்விகள் வருகிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.