நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நடத்தப்படும் விதம் குறித்து கேகேஆர் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அணி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இல்லாத நிலையிலும் முகமது சிராஜிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “முகமது சிராஜை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தயவுசெய்து இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள். அவர் ஒன்றும் ஒரு பிகினர் கிடையாது. அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய சக்தியாக இருந்திருக்கிறார். ஆனால் கடந்த 35 மாதங்களில் அவர் வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 24 மாதங்களில் அவர் வெறும் ஏழு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “நீண்ட நாட்களுக்கு முன்பு ரோகித் சர்மா கேப்டனாக இருந்தபோது, பழைய பந்தில் சிராஜின் விக்கெட் எடுக்கும் திறன் குறைகிறது என்று பிரஸ் கான்ஃபரன்ஸில் கூறினார். அதுதான் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது போல தெரிகிறது. என்னை பொறுத்தவரை இது சரியாக இல்லை. நியூசிலாந்தில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்த போது கூட சிராஜிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவர் ஏழாவது ஆப்ஷனாக மாற்றப்பட்டு விட்டார்” என்று கூறி இருக்கிறார்.