இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பும்ரா மற்றும் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் ஆகியோரிடையே சிறிய வாக்குவாதம் நிகழ்ந்தது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி சாம் கான்ஸ்டாஸை வீழ்த்த பும்ராவிற்கு அறிவுரைகள் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க சிட்னியில் நடைபெற்று வரும் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய போது 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் பும்ராவிற்கு இடையே சிறிய வாக்குவாதம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் அவரது விக்கெட்டை எடுக்க விராட் கோலி அவரது உடலை நோக்கி பந்துகளை வீசும் படியும் அதனால் அவர் ஆட்டம் இழக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பும்ராவிடம் கூறியிருக்கும் வீடியோ தொகுப்பு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
விராட் கோலி பும்ராவிடம் ” சாம் கான்ஸ்டாஸ்க்கு தொடர்ந்து அவரது உடலுக்கு அருகில் பந்து வீசவும். அதனால் அவர் தாக்குதல் ஷாட்களுக்குச் செல்லலாம். அவர் அப்படி அடிக்கும் போது ஆட்டம் இழந்து வெளியேறுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. நமக்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது, எனவே இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று விராட் கோலி கூறியிருக்கிறார். விராட் கோலி சொன்னதைப் போலவே பும்ரா செய்ய அதனை எதிர்கொண்ட சாம் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பிறகு 12வது ஓவரில் முகமது சிராஜ் அவரை வீழ்த்தினார்.
இதையும் படிங்க:எந்த கேப்டனும் செய்யாத வேலையை.. ரோஹித் செஞ்சிருக்காரு.. தோனியை மறைமுகமாக விமர்சித்த ஹர்பஜன்.. முழு விபரம்
அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியின் அபாரமான பந்துவீச்சால் 181 ரன்கள் மட்டுமே குவித்தது. அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்திருக்கிறது. இன்னமும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. எனவே இந்திய அணி ஐந்தாவது போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.