மொத்தம் 754 ரன்கள்… குலுங்கிய டெல்லி.. 3 உலக சாதனைகளுடன் தென் ஆப்பிரிக்கா இலங்கையை உலக கோப்பையில் வீழ்த்தியது!

0
1153
SA

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் டெல்லி மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன!

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்து வீசுவது என்று தீர்மானித்தது. களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா மொத்தமாக 50 ஓவர்கள் முடிவில், குறைந்த பந்தில் உலகக்கோப்பை சதம், ஒரே போட்டியில் ஒரே அணி வீரர்கள் மூன்று பேர் சதம், உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் என, மூன்று உலகக் கோப்பை உலக சாதனைகளை படைத்து அசத்தியது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா எட்டு ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மற்றும் ராஸி வாண்டர் டேசன் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

இறுதியில் குயின்டன் டி காக் 84 பந்துகளில் 100 ரன்கள், ராஸி வாண்டர் டேசன் 110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் இவர்களது பொறுப்பை அதிரடியாக எடுத்துக் கொண்டார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்த மார்க்ரம் அதிரடியாக 49 பந்துகளில் சதம் அடித்து, 54 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஹென்றி கிளாசன் 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர் அதிரடியாக 21 பந்துகளில் 39 ரன்கள், மார்க்கோ யான்சென் ஏழு பந்துகளில் 12 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 428 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் தில்சன் மதுசங்கா பத்து ஓவர்களில் 86 ரன்களுக்கு இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 0, குசால் பெரேரா 7 என துவக்கத்திலேயே வெளியேற்றப்பட்டார்கள்.

ஆனால் மூன்றாவதாக வந்த குசால் மெண்டிஸ் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு திருப்பி பதிலடி தந்தார். 42 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரிகள் எட்டு சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து சதீர சமரவிக்ரமா 23 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இவர்களுக்கு அடுத்து சரித் அசலங்கா கேப்டன் டசன் சனகா ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி பந்துக்குப் பந்து ரன் அடித்து பொறுப்பாக விளையாடியது. அசலங்கா 65 பந்தில் 75 ரன்கள், டசன் சனகா 62 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இளம் வீரர் வெல்லாலகே கோல்டன் டக் அடித்தார்.

கடைசி வரிசையில் கசுன் ரஜிதா 33, மதிஷா பதிரனா 5, தில்ஷன் மதுசங்கா 4* ரன்கள் எடுக்க, முடிவில் 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டும் எடுத்து, 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட் கைப்பற்றினார். ரபாடா, மகாராஜ், யான்சன் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்கள்.