பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் மொத்தம் 19 விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. தற்போது இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளில் மீண்டும் சரிந்த பாகிஸ்தான்
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் நாளில் 46 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. பின்பு 184 ரன் வரையில் விக்கெட் ஏதும் தராமல் பாகிஸ்தான் அணி சுதாரித்தது. இதைத்தொடர்ந்து 230 ரன்னில் திடீரென ஆல் அவுட் ஆனது. சவுத் சகில் 84, முகமது ரிஸ்வான் 74 ரன்கள் எடுத்தார்கள். ஜைய்டன் சீல்ஸ் மற்றும் வாரிக்கன் தல 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் ஸ்பின்னர்களிடம் சிக்கி பரிதாபமாக 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர்கள் நோமன் அலி ஐந்து, சஜித் கான் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். பந்துவீச்சில் திரும்பி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் கோட்டை விட்டது.
பாகிஸ்தான் சிறப்பான முன்னிலை
இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் சிறப்பாக விளையாடி 70 பந்தில் 52 ரன் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிக்கன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்
இதையும் படிங்க : கருண் நாயரை செலக்ட் பண்ணாத காரணம் இதுதான்.. இந்த டீம்ல இந்த விஷயத்தை பாருங்க – அகர்கர் பேச்சு
மேலும் இரண்டாவது இன்னிங்சிலும் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 11 பந்தில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தார். மேலும் இன்று இரண்டாவது நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் மீதம் இருந்த ஆறு விக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட், பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் என மொத்தம் 19 விக்கெட்டுகள் சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






