மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே நாட்டின் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி நான்காம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது .
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி கிரேக் ப்ரத்வெயிட் மற்றும் தேக்நரேன் சந்திர பால் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 447 ரன்களை எடுத்து ஆறு விக்கெட் களை இழந்து டிக்ளர் செய்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 379 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது . அந்த அணியின் வீரர் கேரி பேலன்ஸ் அபாரமாக ஆடி 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேக்நரேன் சந்திரபால் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல் இன்னிங்ஸில் 207 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் . இந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆட்டக்காரரான சிவனரைன் சந்தர்பால் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த அணியின் கேப்டன் கிரேக் ப்ரத்வெயிட் 182 ரன்கள் எடுத்தார் . இருவரும் இணைந்து முதலாவது விக்கெட் 336 ரன்கள் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது .
இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 203 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது . இதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு 271 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இந்த இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ரண்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது .
டிராவில் முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில் 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது . அதாவது ஒரே ஜோடி இந்த டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்திருக்கிறது என்பதுதான் அந்த சாதனை . மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஜோடியான கிரேக் ப்ரத்வெயிட் மற்றும் தேக்நரேன் சந்தர்பால் ஆகியோர் இந்த டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் வெவ்வேறான நேரங்களில் பேட்டிங் செய்திருக்கிறார்கள் . இப்படி நடந்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் .
இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் பேட்டிங்கை துவங்கிய இவர்கள் முதல் மூன்று நாட்கள் பேட்டிங் செய்தனர் . மேலும் நான்காம் நாளன்று ஜிம்பாப்வே அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்த போது இந்த ஜோடி மீண்டும் பேட்டிங் ஆட வந்தது . இந்த டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளான நேற்றும் ப்ரத்வெயிட் மற்றும் சந்தர்பால் ஜோடி களத்தில் இருந்தது இதன் மூலம் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்திருக்கிறார்கள் . இதற்கு முன் வெவ்வேறு பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளின் ஐந்து நாட்களிலும் வெவ்வேறான நேரங்களில் பேட்டிங் செய்திருக்கின்றனர் . ஆனால் ஒரு ஜோடியாக டெஸ்ட் கிரிக்கெட்டின் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்தது இந்த ஜோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது .






