நடப்பு ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரது சர்ச்சையான கொண்டாட்டம் குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஷாகின் அப்ரிடி விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது சர்ச்சை ஆனது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுடன் களத்தில் மோதல் போக்கை கடைப்பிடிக்க பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சர்ச்சை கொண்டாட்டம்
கடந்த போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பர்ஹான் அரை சதம் அடித்த பிறகு அதை கொண்டாடும் விதமாக துப்பாக்கியால் சுடுவது போல சைகை செய்து கொண்டாடினார். இன்னொரு பக்கம் ஹாரிஸ் ரவுப் விமானங்களை வீழ்த்தியது போல சைகை செய்து இந்திய ரசிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்ற காரணத்தினால் இது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து ஷாகின் அப்ரிடி விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுதான் நடந்தது
இதுகுறித்து ஷாகின் அப்ரிடி பேசும்பொழுது “இந்திய அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக இருப்பதற்கு நாங்கள் தனியாக எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை. நாங்கள் விளையாட தொடங்கிய காலத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடுவது எங்களுடைய இயல்பாக இருந்து வருகிறது. இங்கு இப்படித்தான் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இது மன உறுதியை வெளிப்படுத்த முன் வைக்கப்படுகிறது”
இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மாவுக்கு அடிக்கும் அடுத்த பெரிய அதிர்ஷ்டம்.. சிக்கலில் 2 வீரர்கள்.. அகர்கர் அதிரடி முடிவு
“எங்களுடைய வேலை கிரிக்கெட் விளையாடுவது மட்டும்தான். மக்கள் என்ன வேண்டுமானாலும் அவரவர் பார்வைக்கு ஏற்ற வகையில் கற்பனை செய்து கொள்ளலாம். நாங்கள் ஆசிய கோப்பையை வெல்ல வந்திருக்கிறோம். பாகிஸ்தானின் நம்பிக்கையை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் சிறப்பாக செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.






