இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டின் காயம் மோசமானதாக இருக்கலாம் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்து இருக்கிறார்.
நேற்று துவங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. இந்திய அணி முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருக்கிறது. போட்டியின் போது கால் பாதத்தில் காயம் அடைந்ததால் ரிஷப் பண்ட் வெளியேறி இருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை
நேற்றைய போட்டியின் போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சி செய்த ரிஷப் பண்ட் கால் பாதத்தில் பந்து தாக்கி காயமடைந்தார். காலில் காயம் ஏற்பட உடனடியாக பாதம் வீங்கியது. மேலும் அவர் களத்தில் நிற்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். உடனடியாக மைதானத்திற்குள் வாகனம் கொண்டுவரப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும் பொழுது ” ரிஷப் பண்ட் காலை தரையில் வைக்க முடியவே இல்லை. அவரை அழைத்துச் செல்ல வாகனம் வருவதற்கு முன்பாக 7, 8 நிமிடங்கள் அவர் சுற்றிக் கொண்டே இருந்தார். அவருக்கு உடனடியாக பாதம் வீங்கியது கவலை தருவதாக இருக்கிறது. பாதத்தின் வெளிப்புறத்தில் உடைய கூடிய எலும்புகள் இருக்கின்றன. அவை பாதிப்படைந்ததால் தான் உடனடியாக ரத்தம் மற்றும் வீக்கம் வந்ததாக தோன்றுகிறது. ஆனால் உறுதியாக தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் முகச்சுளிப்பு
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் காலை கீழே வைக்காமல், கீழே குனிந்து தனது காயத்தை கூட பார்க்காமல் முகத்தை சுளித்தபடியே இருந்தார். அவருக்கு வலி மிக அதிகமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு வீரர் காயத்தில் இப்படி முகம் சுளிப்பது காயம் பெரியதாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது”
இதையும் படிங்க : களத்தில் சுருண்டு விழுந்த பண்ட்.. 2வது நாள் ஆட்டத்தில் விளையாடுவாரா.? சாய் சுதர்சன் கொடுத்த முக்கிய அப்டேட்.. IND VS ENG
“இப்படியான காயங்கள் ஒரு இரவில் இன்னும் மோசமானதாக மாறிவிடும். காலையில் எழும்பொழுது வலி மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் பாதத்திற்கு ஐஸ் ஒத்தடங்கள் தொடர்ந்து கொடுத்தால் கூட வலி மிக அதிகமாக இருக்கும். மேலும் பாதத்தில் எலும்பு முறிவு எதுவும் இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம்” என தெரிவித்திருக்கிறார்.






