நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூர் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் அணியில் தற்போது மாறி இருக்கிற நேர்மறையான அணுகுமுறை குறித்து கோச் ஸ்டீபன் பிளம்மிங் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
2 ரன்னில் சிஎஸ்கே தோல்வி
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தல் 33 பந்துகளில் 55 ரன்கள், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் விராட் கோலி 33 பந்துகளில் 62 ரன்கள் குவிக்க இறுதியில் செப்பேர்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 53 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
அதற்கு பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 17 வயது இளம் துவக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரெ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 94 ரன்கள் குவித்து எதிர்பாராமல் ஆட்டம் இழந்து வெளியேறியதால் அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. இருப்பினும் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 45 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
அவரிடம் எனக்கு பிடித்த விஷயம்
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பிளம்மிங் கூறும் போது “அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. ஒரு சேர அவரது கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு என்பது அற்புதமான முறையில் செயல்படுகிறது. நவீன கால டி20 வீரரிடம் இருக்கிற ஆக்ரோஷம் அவரிடம் இருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய மேடையில் அதை செயல்படுத்தும் ஒரு விஷயம் அவரிடம் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கிறது. நிறைய ஷாட்கள் அடிப்பது ஒரு விஷயம்.
இதையும் படிங்க:தொடர் தோல்வி வந்தாலும் பரவால்ல.. ஆனா சிஎஸ்கே நிர்வாகம் இதை மட்டும் கைவிடவே கூடாது – ஆஸி ஆரோன் பின்ச் பேட்டி
ஆனால் பெரிய வீரர்கள் மத்தியில் ஒரு பெரிய மேடையில் இதனை பயன்படுத்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். எங்களுக்கு எப்போதுமே அமைதியாக உள்ள ஒரு முகாம் உள்ளது. சிஎஸ்கே முகாம் எப்போதுமே அமைதியான குணாதிசயத்தை கொண்ட ஒரு முகாமாகும். எனவே ஆயுஷ் எல்லா வழிகளிலும் பொருந்தக்கூடிய ஒரு வீரராக இருக்கிறார்” என்று கூறுகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி இலக்குக்கு அருகில் வரை வந்த சென்னை அணி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






