நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மோதிய போட்டியில் டாஸ் நிகழ்வில் டேனி மோரிசன் மற்றும் தோனி இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் மிக முக்கியமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் மீண்டும் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறியிருக்கிறது.
தோனி உடனான உரையாடல்
நேற்றைய போட்டிக்கான டாஸ் நிகழ்வில் டாஸை வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேசினார். இதைத்தொடர்ந்து தோனி பேச வரும் பொழுது சிஎஸ்கே மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் பெரிய அளவில் இருந்தது. இது நீண்ட நேரம் தொடரவும் செய்தது. இதனால் தோனி உடனடியாக பேச முடியவில்லை.
மேலும் டாஸ் நிகழ்வை தொகுத்து வழங்கிய டேனி மோரிசன் தோனியிடம் “நீங்கள் ரசிகர்களின் இந்த ஆதரவுக்காகவே அடுத்த வருடமும் வரவேண்டும் போலவே” என்று கூறினார். அதற்கு தோனி நகைச்சுவையாக ” நான் அடுத்த போட்டி விளையாடுவேனா என்றே தெரியவில்லை” என்று பதில் கூறினார். தற்பொழுது இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அடுத்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடக் கூடாது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தோனியை உறுதியாக நம்பலாம்
இந்த நிலையில் தோனி மேற்கொண்டு விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு செயல்பட மாட்டார், அவருடைய இடத்தில் வன்ஸ் பேடியை விளையாட வைத்துவிட்டு, இளம் வீரர் யாரிடமாவது கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தோணி இந்த சீசனிலேயே ஒதுங்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மும்பை நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட்.. கடப்பாரை காம்பினேஷனுக்கு விழுந்த அடி.. மாற்று வீரர் அறிவிப்பு
இதுகுறித்து பேசி இருக்கும் ஆரோன் பின்ச் கூறும் பொழுது ” இது எதுவுமே நடக்காது. இதெல்லாம் சும்மா யூகத்தின் அடிப்படையில் பேசப்படக்கூடியது மட்டுமே. ஏற்கனவே டேனி இதே மாதிரி தோனியிடம் அவரது ஓய்வு குறித்து பேசி இருக்கிறார். தோனியும் அதற்கு சிறப்பான முறையில் பதில் அளித்து இருக்கிறார். இது இந்த முறையும் தொடர்ந்து இருக்கிறது. தோனி நிச்சயமாக தொடர்ந்து அடுத்த ஆண்டும் விளையாடுவார். அவர் இதை அப்படியே விட்டுவிட்டு போய் விடமாட்டார்” என்று கூறியிருக்கிறார்.






