93 ரன்.. 6 சிக்ஸ்.. ஒற்றை ஆளாய் போட்டியை மாற்றிய கேஎல் ராகுல்.. சொந்த மண்ணில் ஆர்சிபி மோசமான சாதனை.. டெல்லி அபார வெற்றி

0
219

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி கேஎல் ராகுலின் அபாரமான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

ஆர்சிபி டெல்லி மோதல்

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 24 ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டார்க் வீச, அந்த ஓவரில் வெறும் 7 ரன் மட்டுமே எடுத்த ஆர்சிபி அதற்கடுத்து அக்சார் பட்டேலின் இரண்டாவது ஓவரில் 16 ரன்கள் குவித்தது. மூன்றாவது ஓவரை தொடர்ந்து ஸ்டார்க் வீச அந்த ஓவரை எதிர்கொண்ட பில் சால்ட் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் குவித்தார்.

17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் பில் சால்ட் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக, விராட் கோலி 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் டில்லி அணி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பெங்களூர் அணியை 163 ரன்களில் கட்டுப்படுத்தியது. இறுதியில் டிம் டேவிட் 20 பந்துகளில் 4 சிக்ஸர்களின் உதவியோடு 37 ரன்கள் குவித்தார். டெல்லி அணியில் விப்ராஜ் நிகாம் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

கேஎல் ராகுல் அபார ஆட்டம்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. இதில் எதிர்பாராத விதமாக டூப்ளஸ்சிஸ் 2 ரன், ஜேக் பிரேசர் 7 ரன், அபிஷேக் பொரேல் 7 ரன், கேப்டன் அக்சார் பட்டேல் 15 ரன்னில் வெளியேற டெல்லி அணி 9 ஓவர்களில் 58 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது அணியின் தூணாக நின்று கொண்டிருந்த மண்ணின் மைந்தன் கேஎல் ராகுலோடு ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் மைதானத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மெதுவாக இன்னிங்ஸை கட்டமைத்து விளையாடியது.

இதையும் படிங்க:யார் என்ன வேணா சொல்லுங்க.. தோனி களம் இறங்கினா கவலையே இல்லாம நான் இதை செய்வேன் – அம்பாதி ராயுடு பேட்டி

அதற்குப் பின்னர் தனது அதிரடியைக் காட்டிய கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில் அதற்குப் பிறகு தனது கியரை முற்றிலுமாக மாற்றினார். குறிப்பாக ஆட்டத்தின் 15 வது வரை ஹாஸில் வுட் வீச அந்த ஓவரில் 22 ரன்கள் குவித்து போட்டியை மொத்தமாக டெல்லியின் பக்கம் கேஎல் ராகுல் மாற்றினார். இதனால் இறுதியாக டெல்லி அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 169 ரன்கள் குவித்து நான்காவது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்தது. இதில் கேஎல் ராகுல் 53 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 93 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஸ்டெப்ஸ் 23 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். இதில் பெங்களூர் அணிக்கு சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியாகும். இந்த தோல்வியின் மூலமாக சொந்த மண்ணில் 45 தோல்விகள் அடைந்து அதிக தோல்வியைப் பெற்ற முதல் அணியாக ஆர்சிபி உள்ளது.

- Advertisement -