நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி எதிராக தன்னுடைய பேட்டிங் திட்டத்தை கேஎல்.ராகுல் எப்படி அமைத்துக் கொண்டார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளர் குழுவை கொண்டு வந்தது. அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக இந்தியா மற்றும் தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார். மேலும் அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியாளர் குழுவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடத்தை மாற்றிய பதானி
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு மிடில் வரிசையில் விளையாடுவதற்கு இங்கிலாந்தின் ஹாரி புரூக் வாங்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென இங்கிலாந்துக்காக விளையாட ஐபிஎல் தொடருக்கு வர மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஹேமங் பதானி கேட்டுக் கொண்டதற்காக மிடில் வரிசையில் கேஎல்.ராகுல் களம் இறங்கி விளையாடினார்.
இந்த நிலையில் திடீரென நேற்று தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளேசிஸ் விளையாட முடியவில்லை. இதன் காரணமாக மீண்டும் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி நல்ல ஸ்கோருக்கு செல்வதற்கு அணியை வழிநடத்தி கூட்டி சென்றார். கடைசி கட்டத்தில்தான் அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இது டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கேஎல்.ராகுல் குறி வைத்த சிஎஸ்கே பவுலர்
இதுகுறித்து பேசி இருக்கும் பயிற்சியாளர் ஹேமங் பதானி “சிஎஸ்கே அணிக்கு நூர் அகமது முக்கிய பவுலர் என்பதால், அவரை பவுலிங்கில் செட்டில் ஆக விடக்கூடாது என்பதில் கேஎல்.ராகுல் மிகவும் தெளிவாக இருந்தார். ஒருமுறை அணியின் சிறந்த பந்துவீச்சாளரை கீழே இறக்கி விட்டு விட்டால், பிறகு மீண்டும் அந்த அணி மேலே வருவது கடினம் என்பதை காட்டுவதற்கு அவர் விரும்பினார்”
இதையும் படிங்க : இது சிஎஸ்கே டீமே கிடையாது.. நேத்து நடந்த அந்த விஷயம் இதுக்கு முன்ன பார்க்காதது – வாசிம் ஜாபர் விமர்சனம்
“அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி விளையாடுவதை நீண்ட காலமாக வழக்கமாக வைத்திருக்கக்கூடிய ஒருவர். இந்திய அணிக்காக பல இடங்களில் அவர் விளையாடி இருக்கிறார். அவராக மட்டும் இல்லாமல் இருந்தால் நான் மிடில் ஆர்டரில் விளையாட கேட்டிருக்க மாட்டேன். அவரால் அதை செய்ய முடியும். அவருக்கு எந்த இடத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரியும்” எனக் கூறி இருக்கிறார்.






