இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடியது குறித்து பேசியவர்கள் அழுது கொண்டே இருக்கலாம் என அதிரடியாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ரோகித் சர்மா தலைமையில் இது இரண்டாவது வெள்ளைப் பந்து ஐசிசி சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென கிளம்பிய விமர்சனம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அட்டவணை அறிவித்த பொழுது இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுகின்ற விஷயம் அனைவருக்குமே தெரிந்ததாக இருந்தது. அப்பொழுது எந்தவித ஆட்சேபத்தையும் தெரிவிக்காத பிற நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதும் தங்களது விமர்சனங்களை ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படியான விமர்சனத்தை வைப்பவர்களை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். குறிப்பாக இப்படி பேசக்கூடியவர்கள் தொட்டில் குழந்தைகள் என்றும் அவர்கள் இன்னும் வளர வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் பதிலடி கொடுத்திருந்தார். தற்போது இதைக் குறிப்பிட்டு சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
அழும் குழந்தைகள் அழுது கொண்டே இருக்கலாம்
இந்திய அணி கடைசியாக நடைபெற்ற ஐசிசி வெள்ளைப் பந்து தொடர்களில் மூன்று முறை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியாக இருக்கிறது. இதில் இரண்டு முறை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு இது மிகச்சிறந்த காலகட்டமாக அமைந்திருக்கிறது.
இதயம் படிங்க : என் குரூப்ப நினைச்சு நான் பெருமைப்படல.. அந்த ஒரு மனிதருக்காக ரொம்ப வருத்தப்படுறேன் – மிட்சல் சான்ட்னர் பேட்டி
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “எந்த அணியாக இருந்தாலும் தொடர்ந்து வெள்ளைப பந்து ஐசிசி தொடர்களில் மூன்று இறுதிப் போட்டிகளை எட்டி அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினால், அந்த அணியையே உலகின் சிறந்த வெள்ளைப் பந்து அணியாக குறிப்பிடுவார்கள். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. கம்பீர் சொன்னது போல இது குறித்து அழுது கொண்டிருப்பவர்கள் அழுது கொண்டே இருக்கலாம். இந்திய அணி வீட்டு நன்மை எதுவும் இல்லாமல் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றி இந்திய அணி எப்படிப்பட்டது என்று அதை காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.






