நடப்புச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் கான் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை விட இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுகின்ற விஷயம் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டு பிரிவாக கிரிக்கெட் வீரர்கள் நிற்கிறார்கள். ஒரு பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்திய அணி தரப்பு நியாயம்
2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் சுற்றில் மூன்று போட்டிகளையும் தொடரை நடத்திய தென் ஆப்பிரிக்க அணி செஞ்சுரியன் மைதானத்தில் விளையாடியது. இறந்தபோதும் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியாமல் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியவில்லை.
இதேபோல இந்திய அணி சொந்த நாட்டில் நடத்திய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 2023 ஆம் ஆண்டு அதிக பயணம் செய்த அணியாக இருந்தது. இந்திய அணிக்கு எந்த ஒரு மைதானத்திலும் இரண்டு போட்டிகள் கிடைக்கவில்லை. ஆனால் மற்ற அணிகளுக்கு ஓய்வு எடுக்க ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் கிடைத்தது. ஆனால் தற்போது இந்திய அணி ஹைபிரிட் முறையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது மட்டும் பலராலும் விமர்சனம் செய்யப்படுகிறது.
சிலர் அட்டவணையால் வெல்கிறார்கள்
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் கான் இந்திய அணி திறமையால் வெல்ல பார்க்கவில்லை என்றும் போட்டி அட்டவணையை உருவாக்குவதால் வெல்ல பார்க்கிறது என்றும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த நிலையில் இவரது விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : இந்திய அணிய குற்றம் சொல்ல இங்கிலாந்து நீங்க யாரு?.. பாகிஸ்தான் நாங்களே எதுவும் சொல்லல – ரஷித் லத்திப் பேட்டி
இதுகுறித்து ஜுனைட் கான் வெளியிட்டுள்ள பதிவில் “நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணிகள் பயணம் செய்து விளையாடிய தூரம். நியூசிலாந்து 7150 கிலோமீட்டர். தென் ஆப்பிரிக்கா 3286 கிலோமீட்டர். இந்திய அணி ஜீரோ கிலோமீட்டர். சில அணிகள் திறமையால் வெற்றி பெறுகின்றன. சில அணிகள் போட்டி அட்டவணையை அமைப்பதன் மூலம் வெற்றி பெறுகின்றன” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






