தற்போதைய பாகிஸ்தான் அணியை விட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகவும் பலமானதாக இருக்கிறது என வெளிப்படையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோதிக்கொள்ள இருக்கும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனே இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய பிரச்சினையாக மாறிய சீனியர் பேட்ஸ்மேன்கள்
பாகிஸ்தான் அணியின் தற்போதைய முக்கிய பிரச்சினையாக அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். குறிப்பாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவருமே தற்காப்பு கிரிக்கெட் விளையாடக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதன் காரணமாக அணிக்கு அதிரடியாக ரன்கள் கொண்டு வர முடியாமலும் நல்ல துவக்கத்தை கொண்டு வர முடியாமலும் தடுமாறுகிறார்கள். இது மற்ற வீரர்களுக்கு பெரிய பிரச்சினையாக மாறுகிறது.
மேலும் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் திறமையான இளம் வீரர்களும் இல்லை. எனவே வாய்ப்பு கொடுக்கப்பட்ட பொழுதிலும் அதை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் பல வீரர்கள் வெளியே சென்று இருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் தேசிய கிரிக்கெட் இரண்டுமே மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி பலமானது
இது குறித்து ஷாகித் அப்ரிடி பேசும் பொழுது ” மேட்ச் வின்னர்கள் பற்றி பேசும்பொழுது பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியை ஒப்பிட்டால் மிக அதிகமான மேட்ச் வின்னர் இந்திய அணியில் இருக்கிறார்கள். மேட்ச் வின்னர்கள் என்றால் தனி ஒரு வீரர்களாக போட்டியை வெல்வது. தற்போது பாகிஸ்தானில் அப்படியான வீரர்கள் யாரும் இல்லை. இந்தியாவின் பலம் மிடில் மற்றும் லோயர் ஆர்டரில் இருக்கிறது”
“நாங்கள் நீண்ட காலமாக வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறோம். ஆனால் யாரும் முன்னேறவில்லை. சில வீரர்கள் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் தொடர்ந்து ஒன்று இரண்டு வருடங்கள் அல்லது 50, 60 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் யாரும் இல்லை”
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி தயாரா இருங்க.. எங்க ஆளு 60 பந்து சம்பவம் ஒன்னு செய்யப் போறாரு – யுவராஜ் சிங் கணிப்பு
“இந்தியா மிகவும் வலுவாக இருக்கிறது. அவர்களுடன் ஒப்பிடும் பொழுது நாங்கள் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறோம். இந்தியாவுடன் வெற்றி பெற வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்கள் வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






