சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி 15 பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக மேலும் ஒரு ஸ்டார் பவுலர் அணியில் இருந்து விலகி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
2017 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி இந்த முறை தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்று வருகிற 19 ஆம் தேதி முதல் போட்டிகளை நடத்த உள்ளது. இந்த சூழ்நிலையில் அனைத்து அணிகளும் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியில் ஏற்கனவே காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹாஸில் வுட் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
அதற்குப் பிறகு அந்த அணியின் ஆல் ரவுண்டர் வீரரான மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கம்மின்ஸ் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரர்கள் நான்கு பேர் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் பெரிய அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இந்த ஐசிசி தொடரில் பங்கு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு ஸ்டார் பவுலர் விலகல்
குறிப்பாக ஐசிசி தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் மோசமான வரலாறு வைத்திருக்கிறது. அதாவது 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு மோசமான வரலாறு இருக்க ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் நிலையில் அந்த அணியின் நட்சத்திர பவுலர் மிச்சல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களினால் தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கம்பீர் உங்க தரத்துல இல்லனாலும்.. அவர மதிச்சு சொல்ற இதை கேளுங்க.. சீனியர் வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை
ஏற்கனவே இந்த தொடரில் கடந்த 12 வருடங்களாக ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத ஆஸ்திரேலியா அணி இந்த முறையாவது அந்த மோசமான வரலாறை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு நட்சத்திர பவுலர் அந்த அணியில் இருந்து விலகி இருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. இருப்பினும் ஸ்மித், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் இருப்பதால் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.






