வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலமாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.
போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களம் இறங்கிய அறிமுக வீரர் 46 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறப்பான சாதனையை செய்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசம் மூன்றாவது ஒருநாள் போட்டி
வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் 73 ரன்கள், மெஹந்தி ஹாசன் 77 ரன்கள் குவித்தனர்.
மேலும் மிடில் வரிசையில் களமிறங்கிய முகமதுல்லா 63 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 84 ரன்கள் குவித்தார். இதனால் வங்கதேச அணி 321 ரன்கள் குவித்தது. பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் கேர்ட்டி 95 ரன்கள் குவித்து வலுவான நிலைக்கு அணியை எடுத்துச் சென்றார்.
சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர்
அதற்குப் பின்னர் மிடில் வரிசையில் களமிறங்கிய அணியின் அறிமுக வீரர் அமீர் ஜாங்கோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வங்கதேச அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவர் 83 பந்துகளை எதிர் கொண்டு ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 104 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இதன் மூலமாக 1978 ஆம் ஆண்டுக்கு பிறகு அறிமுக போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை அமீர் ஜாங்கோ படைத்தார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் தேஸ்மோன்ட் ஹென்ஸ் இந்த சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இங்கிலாந்து 3வது டெஸ்ட்.. ஓய்வு பெறும் டிம் சவுதி.. அவருக்கு வாய்ப்பு தரவே கூடாது.. நியூசிலாந்து இயன் ஸ்மித் பேட்டி
இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 25 பந்துகள் மீதம் வைத்து ஆறு விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. போட்டி நடைபெற்ற வார்னர் பார்க் மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் இதுவாகும். மேலும் ஒரு நாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சேஸ் செய்த மூன்றாவது அதிகபட்ச ரன்கள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






