இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. போட்டியின் முடிவுக்குப் பிறகு இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.
இந்தத் தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் பும்ரா கேப்டன்ஷியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. மேலும் தொடரை சந்திப்பதற்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையையும் பெற்றது. இந்த தன்னம்பிக்கையை மீண்டும் 10 விக்கெட் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையில் தோற்று இழந்திருக்கிறது.
போட்டியை மாற்றிய இரண்டு ஆஸ்திரேலியர்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் சரிவுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த பொழுது டிராவிஸ் ஹெட் அதிரடியாக பேட்டிங் செய்து 141 பந்தில் 140 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா 337 ரன்கள் சேர்த்து வலிமையான முன்னிலை பெற்றது. இந்த இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக இந்திய அணி இடம் இருந்து போட்டியை எடுத்துச் சென்று விட்டார்கள். மீண்டும் 175 ரன்னில் இந்திய அணி சுருள ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெர்த்தில் செய்ததை தவறவிட்டோம்
இந்த போட்டியில் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “இது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமான வாரமாக அமைந்திருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவதற்கு போதுமான அளவுக்கு விளையாடவில்லை. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியை எங்களை விட எல்லா விதத்திலும் மிகச் சிறப்பான முறையில் வெற்றிக்கு தகுதியான வகையில் விளையாடியது”
இதையும் படிங்க : வெறும் 3 ஓவர்.. பும்ராவை தாண்டி கம்மின்ஸ் சாதனை.. இந்தியாவை வென்றது ஆஸி அணி.. 2வது டெஸ்ட்
“எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. பெர்த் டெஸ்டில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இங்கும் அதையே செய்ய விரும்பினோம். ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு என்று ஒரு தனி சவால் இருக்கிறது. நாங்கள் அடுத்து காபா டெஸ்ட் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அங்கே எங்களுக்கு சில நல்ல நினைவுகள் இருக்கிறது. அந்த மைதானத்தில் நல்ல விதத்தில் தொடங்கி நன்றாக விளையாட விரும்புகிறோம்” என்று கூறி இருக்கிறார்.






