இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியை துவங்குகிறது. இந்த போட்டிக்கான வானிலை அறிக்கை, ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரங்களை பார்க்கலாம்.
இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியையே அதிவேக ஆடுகளம் கொண்ட பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடங்குகிறது. இது முன் எப்போதும் நடக்காத சம்பவமாக அமைந்திருக்கிறது.
ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரம்
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் ஆடுகளம் எப்பொழுதும் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகத்தை கொடுக்க கூடியது. பந்து நன்றாக சீம் ஆகும். மேலும் ஆடுகளம் நான்காவது ஐந்தாவது நாட்களில் பெரிய அளவில் விரிசல்கள் விடும். தற்போது அங்கு கொஞ்சம் சிறிதாக பருவ மழை பெய்திருக்கின்ற காரணத்தினால், ஆடுகளம் விரிசல் அடைவது தடுக்கப்படலாம் என ஆடுகளத் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
தற்போது போட்டி நடக்க இருக்கும் பெர்த் ஆப்டஸ் புதிய மைதானத்தில் இதுவரை நான்கு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்று இருக்கிறது. இந்த நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்று இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக நான்கு விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி குறைந்தபட்சமாக 89 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
மேலும் இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோராக முதல் நான்கு இன்னிங்ஸ்களுக்கு 456, 258, 218, 183 ரன்கள் இருக்கின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்வது சரியானதாக இருக்கும் என்று தெரிகிறது.
வானிலை அறிக்கை
இந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூன்று நாட்களிலும் நல்ல வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கும் மழை குறித்தான எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் வேகமான காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது நடைபெறும் பட்சத்தில் கடைசி இரண்டு நாட்கள் போட்டி பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : விராட் கோலி எங்கள மாதிரி.. இந்த விஷயம் பத்தி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டாரு – ஆஸி பிரெட்லீ பேட்டி
இந்திய அணி இதையெல்லாம் தாண்டி முதல் டெஸ்ட் போட்டியில் பெர்த் புதிய ஆப்டஸ் மைதானத்தில் வெற்றி பெற்றால், அந்த மைதானத்தில் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற வெளிநாட்டு அணி என்கின்ற சிறப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






