165 ரன்.. கேட்ச்சை விட்டு.. ஆசியக் கோப்பையையும் விட்ட ஹர்மன்பிரித்.. மந்தனா அதிரடி வீண்.. இலங்கை சாம்பியன்

0
429
Srilanka

தற்போது இலங்கையில் ஒன்பதாவது மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இலங்கை அணி முதல் முறையாக மகளிர் ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது இடத்தில் வந்த உமா செட்டி 7 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 11 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 10 பவுண்டர்கள் உடன் 60 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 16 பந்துகளில் 29 ரன்கள், ரிச்சா கோஸ் 14 பந்தில் 30 ரன்கள் அதிரடியாக எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு165 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் தரப்பில் கவிஷா தில்ஹரி 4 ஓவரில் 36 ரன்களுக்கு 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து கொஞ்சம் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி ஏழு ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து கேப்டன் சமாரி அதப்பட்டு மற்றும் ஹர்ஷிதா மாத்வி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 63 பந்துகளில் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்கினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஹர்ஷிதா மாத்வி மற்றும் கவிஷா தில்ஹரி இருவரும் சேர்ந்து அதிரடியாக மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 40 பந்துகளில் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் இலங்கை அணியை முதல் முறையாக சாம்பியன் ஆக்கினார்கள். இறுதிவரை களத்தில் நின்ற ஹர்ஷிதா மாத்வி 51 பந்துகளில் 69 ரன்கள், கவிஷா தில்ஹரி 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்கள். 18.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : கடவுளே ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. இந்தியா மட்டும்தான் கிரிக்கெட்ல வளருது.. காரணம் இதுதான் – சல்மான் பட் பேச்சு

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்ஷிதா மாத்வி 40 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தபொழுது கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை இந்திய கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் தவறவிட்டார். அவர் கேட்ச்சை மட்டும் அல்லாமல் ஆசியக் கோப்பையையும் தவற விட்டுவிட்டார் என்று கூறலாம். கடைசிக் கட்டத்தில் நெருக்கடியை உண்டாக்க கிடைத்த வாய்ப்பு வீணாக்கப்பட்டது. மேலும் 8 ஆசியக் கோப்பை தொடரில் 7 முறை இந்திய அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.கடந்த முறை பங்களாதேஷ் கைப்பற்றியது. இந்த முறை எளிதாக இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி ஆச்சரியப்படுத்தி ஆசிய சாம்பியன் ஆகியிருக்கிறது!

- Advertisement -