இலங்கை அணிக்கு எதிராக இந்த மாத இறுதியில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணிகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் வாய்ப்பு கிடைக்காத சில வீரர்களுக்காக ஹர்பஜன்சிங் பதிவிட்டிருந்தது தற்பொழுது ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்திய தேர்வுக்குழு அறிவித்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தொடர்ந்து ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதுபோலவே அதே அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. அவர் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் டி20 அணியில் ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் மிகக் குறிப்பாக சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு துணை கேப்டன் ஆகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்.
சுப்மன் கில்லை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த புள்ளிவிபரங்களை வைத்திருக்கும் ருதுராஜ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அளவில் கோபம் அடைய வைத்திருக்கிறது. அவர்கள் ருதுராஜுக்காக நியாயம் கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங் இதுகுறித்து வெளியிட்டிருந்த ஒரு ட்விட்டில் “சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா மற்றும் சாகல் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியின் அங்கமாக இல்லாதது புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவர் முக்கியமாக ருதுராஜ் பெயரைக் கூறவில்லை.
இதையும் படிங்க : குஜராத் ஐபிஎல் 2025-ல் என்னை எடுக்கலனா கவலை இல்லை.. காரணம் இதுதான் – முகமது ஷமி பேட்டி
ருதுராஜ் இடத்தில் பஞ்சாப்பை சேர்ந்த கில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எனவே ருத்ராஜுக்கு ஆதரவாக பேசினால் அது சக பஞ்சாப் வீரரான கில்லுக்கு எதிராக அமையும் என்பதால் ஹர்பஜன் சிங் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசவில்லை என இந்திய ரசிகர்கள் கருதுகிறார்கள். இதனால் ஹர்பஜன் சிங் பஞ்சாப் பாசத்தால் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்றும், இது தவறான போக்கு என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!






