கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்று இந்திய அணி சாம்பியன் ஆனது. இந்தத் தொடரில் ஐசிசி இந்திய அணிக்கு நிறைய சலுகை காட்டுவதாகவும் அது மற்ற அணிகளுக்கு அநியாயமாக அமைவதாகவும் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருந்தார். தற்போது இதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதியில் தோற்றது. அப்போது மைக்கேல் வாகன் ஆப்கானிஸ்தான் அணிக்கு விமான நிலையத்தில் தாமதம் ஏற்பட்டதால் அவர்களால் போட்டிக்கே தயாராக முடியவில்லை, வீரர்களுக்கு மரியாதை தரப்படாததை பார்க்கும் பொழுது பயமாக இருக்கிறது என்று பதிவு செய்திருந்தார்.
இதற்கு அடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டிக்குப் பின்பாக, இந்தப் போட்டி கயானா மைதானத்தில் நடக்க வேண்டியது, ஐசிசி இந்திய அணியை மையப்படுத்தி தொடரை நடத்துகின்ற காரணத்தினால், இது மற்ற அணிகளுக்கு எல்லாம் அநியாயமாக இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது. மேலும் இந்த போட்டியில் சூரிய குமார் யாதவ் பிடித்த கேட்ச் பற்றியும் வெளியில் நிறைய விமர்சனங்கள் சென்று கொண்டு இருக்கிறது. ஐசிசி வீடியோ வெளியிட்ட பின்னும் அது குறித்தான சர்ச்சைகள் நிற்கவில்லை.
மைக்கேல் வாகனின் இந்த விமர்சனங்கள் குறித்து பேசி இருக்கும் ரவி சாஸ்திரி ” மைக்கேல் வாகன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அது குறித்து இந்தியாவில் யாரும் கவலைப்படுவது கிடையாது. முதலில் அவர் இங்கிலாந்து அணியைப் பற்றி நினைக்கட்டும். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்ததை பார்த்து அவர் அந்த அணிக்கு அறிவுரை கூறட்டும்.
இதையும் படிங்க : கூக்குரல் முதல் கேலிப்பேச்சு வரை.. பாண்டியாவும் ஒரு மனிதர் என்பதை நாம் மறந்து விட்டோம்- க்ருணாலின் உணர்ச்சிகர பதிவு
இந்தியா கோப்பைகளை உயர்த்துவது எப்பொழுதும் வழக்கம். அதே சமயத்தில் இங்கிலாந்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது எனக்கு தெரியும். ஆனால் மைக்கேல் வாகன் ஒரு உலகக் கோப்பையை கூட வென்றது கிடையாது. அவர் என்னுடைய சக ஊழியர் அதே சமயத்தில் அவருக்கு நான் இதற்கு கூறும் பதில் இதுதான்” என்று கூறி இருக்கிறார்.






