தற்பொழுது இந்திய தென் ஆப்ரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி நேற்று முதல் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வெல்ல முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பேட்டிங் செய்ய திணறியது.
டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் வரிசையில் தனக்கு மூன்றாவது இடம் வேண்டுமென்று கேட்டு வாங்கிய சுப்மன் கில், நேற்று ஒரு ரன் மட்டுமே எடுத்து, மலிவான முறையில் விக்கெட் கொடுத்து வெளியேறினார்.
மேலும் இதற்கு முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என அவருடைய பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவருடைய ரன் சராசரி 30தான் இருக்கிறது.
இவர் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடியவர். அங்கு மிக முக்கியமான கடினமான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு தேவையான 90 ரன்கள் எடுத்துக் கொடுத்தவர். ஆனால் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். மேலும் இவருக்கு டி20 கிரிக்கெட் இந்திய அணியிலும் இடம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தற்போது இது குறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “தனது முதல் டெஸ்ட் போட்டியில் தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக 90 ரன்கள் எடுத்த கில் உடைய பேட்டிங் கிளாஸ் எங்கே போனது. தற்பொழுது அவருடைய ரன் சராசரி 30 என்று இருக்கிறது. நிச்சயமாக அவருடைய இடத்துக்கு பேட்டிங்கில் போட்டி வந்துவிட்டது.
கில் தற்பொழுது 50 ஓவர் இந்திய கிரிக்கெட்டில் மட்டுமே வலிமையான இடத்தில் இருக்கிறார். மற்ற இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் அவர் செய்ய வேண்டிய வேலை என்பது நிறைய இருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் ஒரு கிளாஸ் பேட்ஸ்மேன். மேலும் டி20 கிரிக்கெட்டில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு நிறைய வாய்ப்பு தருவார்கள்!” என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்!






