நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒட்டுமொத்த தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தனது பேட்டிங், பந்துவீச்சு வியூகம் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கடைசி விக்கெட்டுக்கு முகமது சிராஜுடன் இணைந்து 14 ரன்கள் சேர்த்தது அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு செல்ல உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பந்துவீச்சில் உடனடியாக விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும், சரியான இடங்களில் தொடர்ந்து பந்துவீசியதே வெற்றியைத் தேடித்தந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அர்ஷ்தீப் சிங் பேசும்போது, “எனக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். பதினொன்றாவது வரிசையில் இறங்கினாலும் நான் அதை ரசித்து விளையாடுவேன். எப்போதும் எனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டு பந்தை அடித்து ஆடவே முயற்சிப்பேன். ஆனால் அணியில் சிலர் நான் பந்துக்குப் பயப்படுவதாகக் கூறுவார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, எனக்குத் தேவையான இடத்தை உருவாக்கி ஆடுவேன். பேட்டிங் முடிந்து திரும்பும்போது சிராஜ் என்னிடம் இந்த ரன்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார். நாங்கள் 200 ரன்களைக் கடப்பதை உறுதி செய்தோம், அது எங்கள் மனதில் ஒரு சிறிய மைல்கல்லாக இருந்ததுடன் பந்துவீசுவதற்குத் தேவையான ரன்களையும் கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சு குறித்துத் தொடர்ந்த அவர், “நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தோம், எங்கள் பந்துவீச்சுப் பகுதிகளில் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தோம். உடனடியாக விக்கெட்டுகள் கிடைக்காமல் முடிவுகள் சாதகமாக இல்லாதபோதும் அந்தக் கட்டுப்பாட்டை நாங்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து சரியான இடங்களில் பந்துவீசியதால் இறுதியில் எங்களுக்குப் பலன் கிடைத்தது, நாங்கள் வெற்றி பெற்றோம்” என்று கூறியுள்ளார்.






