இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ், சமீபத்திய போட்டிகளில் பேட்டர்களுக்கு மட்டுமே பிட்ச்கள் சாதகமாக இருப்பது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 225 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து தன் வரலாற்றிலேயே மிகப்பெரிய ரன்-சேஸை பதிவு செய்துள்ளது.
நவீன கிரிக்கெட்டில் பிட்ச்களும் விதிகளும் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு மட்டுமே சாதகமாக மாறுவது கவலை அளிக்கிறது.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் பேசும்போது “நாம் சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை இரண்டு முறை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளோம். இதற்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும்? இந்தியா வெறும் 42 ஓவர்களில் 400 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை சேஸ் செய்துள்ளது. இது கிரிக்கெட் விளையாட்டுக்கு முற்றிலும் ஆரோக்கியமற்றது. எதிர்கால இளைய தலைமுறையினர் பேட்டிங்கை மட்டுமே பெரிதாக பார்ப்பார்கள், மேலும் பந்துவீச்சை ஒரு இரண்டாம் கட்ட திறமையாக மட்டுமே கருதுவார்கள். இனி யாரும் பும்ரா அல்லது ஸ்டார்க் போன்று வர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்”
“பிட்ச்களும் விதிகளும் முழுமையாக பேட்டர்களுக்கு சாதகமாகவே உள்ளன. முன்பெல்லாம் ஒரு இளம் வீரர் சச்சின் டெண்டுல்கர் போல வர விரும்பினால், மற்றொரு வீரர் ஷேன் வார்னே போல வர விரும்பினான். அதற்கு காரணம் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே இருந்த சமமான போட்டியே ஆகும். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே இந்த விளையாட்டில் நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. யார் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை அடிக்கிறார்கள் என்பது மட்டுமே தற்போது உள்ள ஒரே போட்டியாக மாறிவிட்டது” என கூறி இருக்கிறார்.






