2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார்படுத்துவதில், ஆல் ரவுண்டர்கள் தேர்வில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக லெப்ட் ஆர்ம் ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டர் பிரிவில் ரவீந்திர ஜடேஜாவிற்கும் அக்சர் பட்டேலுக்கும் இடையேயான போட்டியில் அக்சர் பட்டேல் முன்னிலையில் இருப்பதாகவும், சீம் பவுலிங் ஆல் ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டியை தயார்படுத்துவதில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் கோச் கௌதம் கம்பீர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசும்போது “அவர் மிகவும் முக்கியமான நபர் என்று நாம் கேள்விப்படுகிறோம், ஆனால் நீங்கள் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் வெளியே உட்கார வைக்கிறீர்கள். நீங்கள் அவரையும் கடைசி போட்டியில் விளையாட வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் அவருக்கும் மேட்ச் டைம் தேவை. எனது கணிப்பில், அந்த ரேஸில் அக்சர் பட்டேல் முன்னிலையில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா பின் தங்கி வருகிறார் என்று நான் உணர்கிறேன். ஒருவேளை செலக்டர்கள் ஏற்கனவே தங்கள் மனதை தீர்மானித்துவிட்டார்கள் போலும். இருவருமே ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில், அக்சர் பட்டேல் முந்திக் கொண்டு சென்றுவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “ஹார்திக் பாண்டியா இல்லாத பட்சத்தில், அல்லது ஹார்திக்குடன் உங்களுக்கு மற்றொரு சீம் பவுலிங் ஆல் ரவுண்டர் தேவைப்படும் பட்சத்தில் தான் உண்மையான விவாதமே தொடங்குகிறது. அதில் ஒருவர் நிதிஷ் குமார் ரெட்டி. இந்த ரேஸில் அவர் தான் தற்போதைக்கு மற்ற அனைவரையும் விட முன்னணியில் இருக்கிறார். நிதிஷ் குமார் ரெட்டி இருக்கிறார், ஆனால் அவர் இன்னும் தயாராகவில்லை. அவரை நாம் தயாராக அனுமதிக்கவில்லை. அவரை நாம் எப்படி தயார்படுத்தப் போகிறோம்? நிதிஷ் குமார் ரெட்டியை தயார்படுத்துவது தான் சுப்மன் கில் மற்றும் கௌதம் கம்பீரின் மிகப்பெரிய பொறுப்பாகும். அந்த பொறுப்பில் நாம் தோற்றால், கடவுள் மறுத்து ஹார்திக் பாண்டியாவுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், உலகக்கோப்பையில் நமக்கு பெரிய சிக்கல் உருவாகும்” என்று கூறி முடித்து இருக்கிறார்.






