ஜப்பானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்றதாக பரவும் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் – இந்தியா இடையிலான டி20ஐ போட்டியில், கடைசி ஓவரில் நடுவர் வழங்கிய வைட் முடிவை இந்திய பிளேயர்கள் எதிர்த்ததால் அது திரும்பப் பெறப்பட்டது. இதைப் பயன்படுத்தி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சை புயலைக் கிளப்பியுள்ளது.
இந்திய அணி வீரர்கள் நடுவர்களை மிரட்டி முடிவை மாற்ற வைத்ததாகவும், ஏமாற்றி வெற்றி பெற்றதாகவும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும்போது, “இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்றதாக சிலர் பேசி வருகிறார்கள். கடைசி ஓவரில் வைட் முடிவு மாற்றப்பட்டதால், இந்தியா அழுத்தம் கொடுத்து இந்த முடிவை வாங்கியது என்று கூறுகிறார்கள். சிலர் தேவையில்லாமல் குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்திய அணியை திட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் இருக்கிறார்கள். இந்த வெற்றியை நியாயமற்ற வெற்றி என்று சொல்ல முடியாது, ஏனெனில் இதில் எந்த தவறும் நடக்கவில்லை.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது, “ஐசிசி விதிகளின்படி ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆகிய இரண்டு ஷாட்களுக்கும் வித்தியாசம் இல்லை, இரண்டும் ஒரே மாதிரியாகவே கருதப்படும். பேட்டர் தனது ஸ்டான்ஸை மாற்றி அமைக்கும் போது வைட் கோட்டின் சலுகை பௌலருக்கே சாதகமாக அமையும். பேட்டர் தனது நிலையை மாற்றிக் கொண்டால், விதிகளின்படி அவர் இடதுகை மற்றும் வலதுகை பேட்டர் ஆகிய இரண்டுமாகவே பார்க்கப்படுவார். எனவே நடுவர்கள் எடுத்த முடிவு விதிகளுக்கு உட்பட்டது தான்.” என்று கூறி இருக்கிறார்.






