2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் பதிரகே தங்கப் பதக்கத்தை வென்று கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவை பின்னுக்குத் தள்ளி அவர் முதலிடம் பிடித்தது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ருமேஷின் வெற்றியை விட, அவரது பின்னணிதான் தற்போது அதிகம் பேசப்படுகிறது.
இன்று ஈட்டி எறிதலில் சாதனை படைத்துள்ள ருமேஷ், ஒரு காலத்தில் வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர். இளமைக் காலத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பந்துவீசிய அவர், 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 134 கி.மீ. வேகத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த வேகப்பந்துவீச்சாளர் தேர்வில் தற்போது இலங்கை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இஷான் மலிங்காவுக்கு அடுத்த இடத்தை அவர் பிடித்திருந்தார்.
வேகப்பந்துவீச்சில் இருந்து ஈட்டி எறிதலுக்கு
அதன்பிறகு பயிற்சியாளர் டோனி பிரசன்னாவின் வழிகாட்டுதலால் ருமேஷ் ஈட்டி எறிதலுக்கு மாறினார். அடிப்படைகளை சரியாக கற்றுக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்று எப்போதும் தனது பயிற்சியாளர் கூறியதாகவும், அவர் தனக்கு பயிற்சியாளர் மட்டுமல்ல வாழ்க்கையையும் கற்றுக்கொடுத்தவர் என்றும் ருமேஷ் தெரிவித்துள்ளார். அந்த முடிவுதான் இன்று அவரை காமன்வெல்த் தங்கப் பதக்க மேடைக்கு அழைத்து வந்துள்ளது.
இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் செயல்பட்ட ருமேஷ், தனது சிறந்த முயற்சியை பதிவு செய்து நீரஜ் சோப்ராவை பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. ருமேஷின் இந்த வெற்றி தடகள உலகின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது.
வேகப்பந்துவீச்சாளராக தொடங்கிய பயணம், ஈட்டி எறிதலில் காமன்வெல்த் சாம்பியனாக முடிந்திருப்பது ருமேஷ் பதிரகேயின் கதையை சிறப்பாக்குகிறது. ஒரு விளையாட்டிலிருந்து மற்றொரு விளையாட்டுக்கு மாறியும் உலகத் தரத்தில் வெற்றி பெற முடியும் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை தடகளத்துக்கும் புதிய நம்பிக்கையை ருமேஷ் ஏற்படுத்தியுள்ளார்.






