தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் அனுபவம் மிகவும் மோசமாக இருந்ததாக வருண் சக்கரவர்த்தி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி பும்ராவுடன் இணைந்து வந்தார். தற்போது ஐபிஎல் தொடரை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார்.
2021 சம்பவம்
2021 ஆம் ஆண்டு கோவிட் உலகெங்கும் பரவலாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் கூட பிசிசிஐ பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி உள்நாட்டில் நடத்தியது. 29 போட்டிகள் முடிந்திருந்த நிலையில், 30வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது.
இந்த நேரத்தில் கொல்கத்தாவின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்திப் வாரியர் இருவருக்கும் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக ஐபிஎல் தொடர் அப்பொழுது நிறுத்தப்பட்டது. வருண் சக்கரவர்த்தி தோள்பட்டை காயத்திற்காக அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் சென்று வந்த போது அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.
மக்கள் மோசமாக பேசினார்கள்
இதுகுறித்து மனம் திறந்து பேசி உள்ள வருண் சக்கரவர்த்தி கூறும் பொழுது “2021 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடர் நிறுத்தப்பட்டது மிகவும் மோசமானதாக இருந்தது. எனக்குதான் முதலில் கோவிட் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த தொடரும் பாதியில் நிறுத்தப்பட்டது”
இதையும் படிங்க : சிஎஸ்கேவில் ஒரு விஷயத்துக்கு கடவுளுக்கு நன்றி சொல்றேன்.. அந்த ஒரு பேர் காலத்துக்கும் நிலைக்கும் – உர்வில் படேல் பேட்டி
“அந்த நேரத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குக்கு ஐபிஎல் தொடர் மட்டுமே இருந்தது. எனக்கு கோவிட் தொற்று வந்த காரணத்தினால் தொடர் நிறுத்தப்பட்டதால் மக்கள் என் குறித்து மிகவும் கோபமாக திட்டினார்கள். அப்பொழுது சமூக வலைதளங்களில் நீ ஏன் சாகக்கூடாது என்றெல்லாம் திட்டினார்கள். நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






