கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் விராட் கோலியின் பேட்டிங் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் விராட் கோலியின் பேட்டிங் குறித்து சில முக்கியமான கருத்துக்களை குறிப்பிட்டு பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு இந்திய அணி களம் இறங்கிய நிலையில் விராட் கோலி ஒரு முனையில் நிலைத்து நின்று போராட மறுமுனையில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் விரைவாக வெளியேறினார்கள். இதனால் இந்திய அணி வெற்றி இலக்கை அடைய முடியாமல் தோற்றது.
அந்த போட்டியில் விராட் கோலி 124 ரன்கள் எடுத்து இறுதிக்கட்டத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் அவரது பேட்டிங் வளரும் தலைமுறையினருக்கு ஒரு மிகப்பெரிய பாடம் என்றும் விராட் கோலியிடமிருந்து இளைஞர்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் விராட் கோலியை மனதார பாராட்டுகிறேன். நான் மட்டுமல்ல விராட் கோலியை பொருத்தவரை அனைவருமே அவரை பாராட்டுகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற தாகத்தை அவர் எப்படி வைத்துக் கொள்கிறார்? மற்றவர்கள் அவருடைய இந்த தாகத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையாக அவர் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை ஆனால் தனிப்பட்ட அவரது பெருமையின் காரணமாக தான் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது.
அவர் தனக்கென ஒரு மதிப்பையும் அளவுகோலையும் அமைத்துக் கொள்கிறார். இது அனைவருக்குமான ஒரு வாழ்க்கை பாடமாகும். மக்கள் அனைவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் விராட் கோலி ஆடுகளத்தில் ஒரு மிருகத்தனமான வீரர் என்பதை மறுக்க முடியாது. அதுதான் அவரை மென்மேலும் சிறப்பாக செயல்பட உந்துகிறது. அவருக்கான போட்டி யாருமே கிடையாது எப்போதுமே அவருக்கான போட்டி அவருடன் மட்டுமே இருக்கும். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பாடம்” என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.






