கிரிக்கெட்

கடந்த டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றும் 2022 இருபது ஓவர் உலகக் கோப்பையில் இடம்பெற வாய்ப்பில்லாத 5 வீரர்கள்

கடந்த ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த 20/20 உலகக்கோப்பையில் இந்திய அணி மீது இருந்த எதிர்பார்ப்பை விட, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் 20/20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

- Advertisement -

காரணம், கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி வந்து இரசிகர்கள், இந்திய அணி நிர்வாகம் எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது. இதுமட்டுமே அல்லாமல் இந்த ஆண்டு இளம் இந்திய வீரர்களிடமிருந்து புதிய திறமைகள் ஐ.பி.எல்-ல் வெளிப்பட்டு ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அர்ஷ்தீப், உம்ரான் மாலிக் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் பெரிய ஆச்சரியத்தைத் தருகிறார்கள்.

இப்படியான காரணங்களால் இந்த ஆண்டு 20/20 உலகக்கோப்பைக்கான அணியை எந்த மாதிரி தேர்வு செய்வார்கள், இப்போதுள்ள சூழலில் யார் யார் இடம்பெறுவார்கள்? பழைய அணியிலிருந்து யார் யார் வெளியேறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களைத் தாண்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் பற்றிக்கொண்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் கடந்த 2021ஆம் ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த 20/20 உலகக்கோப்பை போட்டியில் இடம் பெற்றிருந்த, எந்தெந்த வீரர்கள், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20/20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லாமல் போகலாம் என்று பார்க்க போகிறோம்.

- Advertisement -
இஷான் கிஷன்:

கடந்த ஆண்டு மூன்றாவது துவக்க ஆட்டக்காரராகவும், இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் வாய்ப்பு பெற்ற இவர் அப்போதும் பெரிதாய் எதுவும் செய்யவில்லை. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரிலும் பேட்டிங் பார்மை தொலைத்துவிட்டு தடுமாறுவதோடு, மும்பை அணியின் தொடர்தோல்விகளுக்கும் ஒரு முக்கியக் காரணமாய் இருக்கிறார். எனவே இந்த ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான அணியில் இவர் வாய்ப்பு பெறுவது கடினமே. இவருக்கப் பதிலாக பிரித்வி ஷா, இல்லை சுப்மன் கில் தேர்வு பெறலாம்.

மொகம்மத் ஷமி:

கடந்தாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இவர், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில், இருபது ஓவர் போட்டிகளுக்குச் சிறந்த பவுலர் என்று சொல்ல முடியாது. அப்-ரைட் ஸீமில் கிங்காக இருந்தாலும், 20/20 போட்டியின் டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்படும் திறன் குறைவுதான். மேலும் பவர்-ப்ளேவிலும் ரன்கள் கசியவிடுவார். பவர்-ப்ளே, மிடில் அன்ட் டெத் ஓவர்களில் மாஸ் காட்டும் அர்ஷ்தீப், நடராஜன் போன்றவர்களின் வளர்ச்சி இவர் வாய்ப்பை பறிக்கலாம்.

ஆர்.அஷ்வின்:

இந்த ஆண்டும் தாராளமாக வாய்ப்பு தரலாம். ஆனால் இவருக்கான வாய்ப்பு குதிரைக்கொம்பு. 20/20 போட்டிகளில் ஆப்-ஸ்பின் ஸ்பெசலிஸ்ட் பவுலர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை என்கிற நிலைதான் உலக கிரிக்கெட்டில் நிலவுகிறது.

ராகுல் சஹார்:

யுஸ்வேந்திர சாஹல் மெதுவாக வீசுகிறார். யு.ஏ.இ ஆடுகளங்களில் கொஞ்சம் வேகமாக பிளாட்டராக வீசக்கூடியவர்தான் சரிவருவாரென்று சொல்லி தேர்வாளர்கள் இவரை சாஹலுக்குப் பதிலாக தேர்வு செய்தார்கள். அப்பொழுது ஐ.பி.எல்-ம் யு.ஏ.இ-ல் நடக்க சாஹல்தான் அசத்தினார். ராகுல் சஹார் உலகக்கோப்பை போயும் சொதப்பினார். இந்த முறை சாஹல் இருக்கும் பார்மிற்கு இவருக்கு வாய்ப்பென்பது 0.01% கூட இல்லை.

வருண் சக்ரவர்த்தி:

கடந்த இரு ஐ.பி.எல் சீசன்களாக கொல்கத்தா அணிக்காக இவர் சிறப்பாகச் செயல்பட்டதால், மர்ம சுழலர் என்று உலகக்கோப்பை அணியில் எடுத்தார்கள். ஆனால் இவரது பந்துவீச்சால் எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. கூடவே ரன்களையும் விட்டுக்கொடுத்தார். இவர் அடிக்கடி காயமடைவது இவருக்குப் பெரிய பிரச்சினை. தற்போது குல்தீப், பிஷ்னோய் சிறப்பாகச் செயல்படுவது இவருக்கான வாய்ப்பைத் தடுக்கிறது. மேலும் இந்த ஆண்டு இவரது ஐ.பி.எல் செயல்பாடும் மிகச் சுமராகவே இருக்கிறது!

Published by