சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெறும் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடிய 4 நட்சத்திர வீரர்கள்

0
2902
Scott Styris and Abhinav Mukund

ஐபிஎல் தொடர் உலகளாவிய அளவில் பெரும் வெற்றி பெற்ற தொடர் ஆகும். உலகம் முழுவதும் உள்ள சிறந்த வீரர்கள் அனைவரும் ஒருமுறையாவது ஆடத் துடிக்கும் தொடர் இது. இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்து விளையாடி வரும் அணிகளுள் முக்கியமான ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகும். நான்கு முறை இதுவரை சாம்பியன் பட்டத்தை பெற்ற இந்த அணிக்கு, இந்திய அணிக்கு மூன்று முக்கிய உலகக் கோப்பைகளை பெற்றுத் தந்த தோனி கேப்டனாக உள்ளார். மேலும் ரெய்னா பிராவோ போன்ற மிகச் சிறந்த வீரர்கள் இந்த அணிக்கு விளையாடுவதால் இந்தியா முழுவதும் இந்த அணிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வீரருக்கும் இது போன்ற மிகப்பெரிய அணியில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி சென்னை அணிக்காக இதுவரை வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நான்கு வீரர்களை குறித்து காண்போம்.

அருண் கார்த்திக்

கடந்த 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் சென்னை அணிக்காக களம் கண்டார். 178 என்று சற்று கடின இலக்கை இந்த போட்டியில் துரத்திய சென்னை அணிக்கு முரளிவிஜய் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார். ஆனால் அவர் அவுட் ஆன பிறகு ரன் வேகம் குறைந்ததால் சென்னை அணி இந்த போட்டியில் தோல்வியுற்றது. கடைசி ஓவர்களில் களமிறங்கி அருண் கார்த்திக் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் பிறகு இவர் சென்னை அணிக்காக விளையாட வில்லை.

சந்திரசேகர் கணபதி

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியுற்றாலும் அடுத்து பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அருண் கார்த்திக் இடத்தில் சந்திரசேகர் கணபதி ஆட வைக்கப்பட்டார். அருண் கார்த்திகை போலவே இவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஆவார். கடைசி நேரத்தில் அவருக்கு பேட்டிங் கிடைத்ததால் இவர் முதல் பந்தை பிடிப்பதற்கு முன்பாகவே சென்னை அணி அந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இவரும் இதன் பிறகு சென்னை அணிக்கு விளையாட வில்லை.

அபினவ் முகுந்த்

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடியவர் இவர். ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 211 ரன்கள் குவிக்க அதை சென்னை சூப்பர் கிங்ஸ் துரத்தியது. பொதுவாக துவக்க வீரராக தமிழ்நாட்டு அணிக்கு களமிறங்கும் முகுந்த் இந்தப்போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கினார். ஆனால் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரும் இதன்பிறகு எந்த ஒரு ஆட்டத்திலும் சென்னை அணிக்காக விளையாட வில்லை.

ஸ்காட் ஸ்டோரிஸ்

நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு முன்புவரை ஐபிஎல் தொடரில் இவர் டெக்கான் அணிக்காக விளையாடி வந்தார். சென்னை அணிக்காக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இவர் இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து 5 ரன்கள் எடுத்தார். இவரும் இந்த ஆட்டத்திற்கு பிறகு சென்னை அணிக்கு விளையாடவில்லை.